×

வேங்கிக்கால் ஊராட்சியில் தொடர் மழையால் அரசு பள்ளி மேற்கூரை சிமெண்ட் பூச்சு சிதைந்து விழுந்தது இரவு நடந்ததால் உயிர் தப்பிய மாணவர்கள்

திருவண்ணாமலை, நவ.1: வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்ட் பூச்சு, தொடர் மழையால் சிதைந்து விழுந்தது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் படிக்கின்றனர். மூன்று தனித்தனி கட்டிடங்களில் வகுப்புகள் நடந்து வருகின்றன. அதில், ஒரு வகுப்பறை கட்டிடம் ஏற்கனவே பழுதடைந்திருந்தது. எனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,  கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை தற்காலிக சீரமைப்பு பணி நடந்தது. அதைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் தொடர்ந்து வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில், திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், இந்த கட்டிடத்தின்  கான்கிரீட் தளத்தில் தண்ணீர் தேங்கி, அதன் உறுதித்தன்மையை படிப்படியாக பாதித்திருக்கிறது. மேலும், நேற்று முன்தினம் இரவு கான்கிரீட் தளத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு சிதைந்து, உடைந்து கீழே விழுந்துள்ளது.

நேற்று வழக்கம் போல பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், வகுப்பறையில் சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்ெதாடர்ந்து, அந்த வகுப்பறை பூட்டப்பட்டது. மேலும், அங்கிருந்த  வகுப்பு வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ஒருவேளை, பகல் நேரத்தில் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது மேற்கூரை சிதைந்து  விழுந்திருந்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இந்நிலையில், இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்த தகவலின் பேரில், திருவண்ணாமலை வட்டார கல்வி அலுவலர் நேரில் வந்து ஆய்வு செய்தார். பாதிப்படைந்த  கட்டிடத்தை முற்றிலுமாக அகற்றி, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கும் வரை, அந்த பகுதியில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

வகுப்பறை கட்டிடத்தில் கான்கிரீட் மேற்கூரை சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்த சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கனமழை காலம் தொடங்கியிருப்பதால், பாதிப்புக்குரிய பள்ளி  கட்டிடங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : night collapse ,Vengikal ,
× RELATED வாலிபருக்கு நடுரோட்டில் சரமாரி கத்தி...