×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான மழை நீடிப்பு சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1,006 கன அடி நீர்வரத்து நீர்நிலைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை, நவ.1: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து மழை நீடிப்பதால் அணைகள், ஏரிகள், குளங்களின் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது. அதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை நீடிக்கிறது. அதனால், அணைகள், ஏரிகள், குளங்கள், பாசன கிணறுகள் ஆகிவற்றின் நீர்மட்டம் உயர்ந்து  வருகிறது. செய்யாற்றிலும், கமண்டல நாகநதியிலும் குறைந்தபட்ச வெள்ளம் வர தொடங்கியிருக்கிறது.இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இரவிலும் மழை தொடர்ந்தது. அதேபோல்,  மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்தது. புயல் வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 41.80 மி.மீ. மழை பதிவானது. அதேபோல், ஆரணியில் 20.60 மி.மீ, செய்யாறு 7.50 மி.மீ, செங்கம் 13.40 மி.மீ, சாத்தனூர் அணை 9.80 மி.மீ, வந்தவாசி 18.40 மி.மீ, போளூர் 27 மி.மீ,  திருவண்ணாமலை 20.50 மி.மீ, தண்டராம்பட்டு 27.40 மி.மீ, கலசபாக்கம் 23.30 மி.மீ, சேத்துப்பட்டு 24 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 22 மி.மீ மழை பதிவானது.
மேலும், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 88.65 அடியாகவும், கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மி.க.அடியில் தற்போது 2,305 மி.க.அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,006 கன அடி தண்ணீர்  வந்துகொண்டிருக்கிறது.

குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 30.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 90 கன அடி நீர்வரத்து உள்ளது. மிருகண்டா அணையின் நீர்மட்டம் 11.48 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 78 கன அடி தண்ணீர் வந்து  கொண்டிருக்கிறது. அதேபோல், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.82 அடியாக உள்ளது. செண்பகத்தோப்பு அணையின் மதகுகள் பழுதாகியிருப்பதால், அணையின் தற்போதுள்ள நீர்மட்டத்துக்கு அதிகமாக தண்ணீர் நிரப்ப முடியவில்லை.  எனவே, அணையில் இருந்து வினாடிக்கு 199 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மழை வலுத்து, நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 4 அணைகளும், 1,920  ஏரிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிரம்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Tags : rains ,Tiruvannamalai district ,Sathanur ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே