×

செங்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களின் அவலம் தனிநபர் கழிப்பிடம் குறித்த விழிப்புணர்வு இல்லாத கிராமங்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை

செங்கம், நவ.1: செங்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களில் தனிநபர் கழிப்பிடம் அமைத்து பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கிராம மக்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செங்கம், புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தனிநபர் கழிப்பிடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. மேலும், ₹12 ஆயிரம் மானியத்தில்  தனிநபர் கழிப்பிடம் கட்ட அதிகாரிகள் வீடுவீடாக சென்று ஆய்வு செய்து, அதற்கான தொகையை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தினர். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் சார்பில்  வீடுகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் வீடுகளில் தனிநபர் கழிப்பிடத்தை கட்டி முடிக்கவில்லை. இதுதவிர, ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களும்  பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.

எனவே, செங்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களில் மகளிர் சுயஉதவி குழுவினர், தொண்டு நிறுவனம், சமூக ஆர்வலர்கள் சார்பில், திறந்தவெளியில் மல, ஜலம் கழிக்கக்கூடாது, தனிநபர், சுகாதார வளாகங்களை பயன்படுத்த வேண்டும் என  விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை. கிராமப்புறங்களில் பெரும்பாலான இடங்களில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திறந்தவெளியையே பயன்படுத்தி வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது, மழைக்காலம் என்பதால் கொசுத்தொல்லை, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். வீடுகளில் கட்டாயம் தனிநபர்  கழிப்பிடம் கட்ட வேண்டும் அல்லது பொதுசுகாதார வளாகங்களை பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Unions ,villages ,Chengam ,community activists ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...