×

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே காத்திருக்கும் அபாயம் சிறுக, சிறுக இடிந்து விழும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உயிர் பயத்தில் அரசு ஊழியர்கள்

வேலூர், நவ.1: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறுக, சிறுக இடிந்து விழுந்து வருவதால் தாங்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக அரசு ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.வேலூர்  மாவட்டத்தில் கடந்த 1972ம் ஆண்டு முதல் 2015 வரை சுமார் 20 ஆயிரத்து 743 யூனிட்கள் அமைக்கப்பட்டு அதில் 1,631 வீடுகள் கட்டப்பட்டன. அதில், 13,512 வீட்டுமனைகள் அமைக்கப்பட்டன. இதில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் சுமார் 2,666 அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில்  அரசு ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்ந்த ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கான மாத வாடகை உயர்த்தப்பட்டது. இதனால் அங்கு குடியிருந்தவர்கள் பெரும்பாலானோர், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை காலி செய்துவிட்டு வெளியேறினர். இதனால் தற்போது கலெக்டர்  அலுவலகம் எதிரே பல குடியிருப்புகள் காலியாகவே உள்ளது. இதற்கிடையே தற்போது, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் சிறுக, சிறுக இடிந்து விழுந்து வருகிறது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரது  வீட்டின் சமையல் அறை மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் நேற்று காலை திடீரென இடிந்து காஸ் அடுப்பு, சிலிண்டர் மீது விழுந்தது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதேபோல் அங்குள்ள குடியிருப்புகளும் இடிந்து விழுந்து வருகிறது. புனரமைப்பு பணிகளை அதிகாரிகள் மறந்துவிட்டதால், பூமியில் வளரவேண்டிய ஆலமரம்,  அரசமரங்கள் வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் மீது வளர்ந்து வருகிறது. இதற்கு பராமரிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் செலவிடப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதேபோல் வீட்டு வசதி  வாரியத்தால் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ள சத்துவாச்சாரி, வேலப்பாடி, சேண்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்கள் பூட்டியே கிடக்கிறது.

கலெக்டர் அலுவலகம் எதிரே கடந்த வாரம் பழுதான மின்ஒயர்களால் தீ விபத்து ஏற்பட்டு, ஒரு வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்நிலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே  உயிர் பயத்தை ஏற்படுத்தி பேராபத்து ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது.எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் போர்க்கால அடிப்படையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Government employees ,
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்