×

சோளிங்கர் அருகே எலத்தூரில் சேதமான அரசு பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

சோளிங்கர், நவ.1: சோளிங்கர் அடுத்த எலத்தூர் அரசு பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து சேதமானது. அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். சோளிங்கர்  அடுத்த நெமிலி அருகே உள்ள எலத்தூர் கொல்லைமேடு பகுதியில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இதில் 13 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது.  இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில், பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தும், நீர் நிலைகள் நிரம்பி  வருகிறது. மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை எலத்தூரில் உள்ள அரசு தொடக்க பள்ளியின் கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இதுகுறித்து, தகவலறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத், நெமிலி தாசில்தார் சதீஷ் ஆகியோர் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளியை ஆய்வு செய்தனர்.அப்போது, கலெக்டர்  அதிகாரிகளிடம், இந்த பள்ளியை முழுவதுமாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட்டார். மேலும், அதுவரை இப்பள்ளியின் மாணவர்களுக்கு வேறு பாதுகாப்பான இடத்தில் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிட்டார்.

Tags : Demolition ,building ,Elathur ,Government School ,Sholingar ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...