×

மயிலாடியில் 99 மி.மீ பதிவு குமரி முழுவதும் விடிய விடிய கனமழை சிற்றார்-1 அணையில் மறுகால் திறப்பு; கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு

நாகர்கோவில், அக்.31: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 99 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடல் நோக்கி நகர தொடங்கியுள்ளது. இது புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு ெதாடங்கிய மழை விட்டு விட்டு பெய்தவண்ணம் இருந்தது. நேற்றும் அதே மழை நீடித்தது. காலையில் சிறிது நேரம் வெயிலடித்த நிலையில் நேற்று பகல் பொழுது தொடங்கி மழை கொட்டியது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.60 அடியாக இருந்தது. அணைக்கு 1141 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 70.10 அடியாக உள்ளது. அணைக்கு 798 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 1300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக மயிலாடியில் 99.4 மி.மீ மழை பதிவாகி இருந்தது.சிற்றார்-1ல் 16 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 136 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.  அணையில் இருந்து உபரி நீர் 200 கன அடிக்கு மேல் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவி பகுதியில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றார்-2ல் 16.11 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 23.80 அடியும், மாம்பழத்துறையாறில் 54.12 அடியும், முக்கடல் அணையில் 25 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. பேச்சிப்பாறை அணையும் நிரம்பி வருவதால் அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் மழைக்கு மீண்டும் வீடுகள் இடிய தொடங்கியுள்ளன. அகஸ்தீஸ்வரத்தில் ஒன்று, விளவங்கோட்டில் மூன்று வீடுகள் என்று நேற்று காலை வரை மொத்தம் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் பழையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணி உள்ளிட்டவற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மாவட்டம் முழுவதும் மழை, புயல் எச்சரிக்கை காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஏற்கனவே தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க செல்கின்ற விசைப்படகு கள், நாட்டுப்படகுகள் போன்றவை கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கட்டுமான தொழிலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் உற்பத்தியும் முடங்கியுள்ளது.  தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் மாவட்டம் முழுவதும் சாலைகள் மீண்டும் சேதமடைய தொடங்கியுள்ளன. அண்மையில் ‘பேட்ஜ் ஒர்க்’ செய்யப்பட்ட மாநகராட்சி சாலைகளும் உடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால்களை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருவனந்தபுரம் சாலையில் வெட்டூர்ணிடம் பகுதியில் பெருமளவு தண்ணீர் சாலையில் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் வடிகால்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை மாநகராட்சியும், உள்ளாட்சி அமைப்புகளும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து அவை சாலைகளை பாதிக்காமல் இருக்க தேவை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Re-opening ,dam ,Flooding ,Mayiladuthurai ,Kumari ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்