×

அசம்பு ரோட்டில் ஆர்டிஒ திடீர் ஆய்வு

நாகர்கோவில் வடசேரி, கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தால் உடன் அந்த தண்ணீர் முழுவதும் அசம்பு ரோட்டில் பாய்ந்து சாலையை மூழ்கடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைபடும். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைதான் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத்துறையோ இதனை கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் கரைபுரண்டு பாய்ந்ததால் அந்த பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் கட்டப்பட்டது. தற்போது அந்த பாலத்தையொட்டிய பகுதியில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று பகல் வேளையில் மழை பெய்துகொண்டிருந்தபோது அவ்வழியே நாகர்கோவில் ஆர்டிஒ மயில் ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். அவர் திடீரென்று மழை வெள்ளம் சாலையில் பாய்ந்தோடுவதை பார்த்து வாகனத்தை நிறுத்தி அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த பகுதியில் உள்ள வடிகாலை சீர் செய்யவும், மழைநீர் சாலையில் வழிந்தோடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இந்த பகுதியில் மழைநீர் சாலையில் பாய்ந்தோடுவது தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : RTO outbreak ,Asambu Road ,
× RELATED புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளால்...