×

தொடரும் அரசு டாக்டர்கள் போராட்டம்

நாகர்கோவில், அக்.31 : தமிழ்நாட்டில் அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கு ஏற்ப காலம் சார்ந்த ஊதிய உயர்வு மற்றும் படிகள் வழங்கிட வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியிடங்களை குறைக்க கூடாது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்கள் பணியிடங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாகடர்கள்  சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 6 வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில், போதிய டாக்டர்கள் இல்லாமல் பயிற்சி டாக்டர்கள் தான் சிகிச்சை அளிக்கிறார்கள். இதனால் நோயாளிகளுக்கு முழுமையாக திருப்தி இல்லாத நிலை உள்ளது. மேலும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், டாக்டர்களின் வேலை நிறுத்தம் பெரும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது. மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்களின் வருகை குறைந்துள்ளது. நேற்று 6 வது நாள் போராட்டத்தையொட்டி, டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுரேஷ்பாலன் தலைமையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

பின்னர் டாக்டர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு டாக்டர்களின் போராட்டத்தை சிதைக்க பார்க்கிறது. ஒரு சில நிர்வாகிகளை அழைத்து பேசி விட்டு பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என அறிவிக்கிறார்கள். டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பொதுமக்களின் அவசர தேவை கருதி, அவசர சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்கிறோம். எங்களது போராட்டத்துக்கு பொதுமக்களும் ஆதரவு தந்துள்ளனர். எனவே நியாயமான கோரிக்கையை ஏற்று, அரசு உடனடியாக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றனர். மருத்துவ கல்லூரி டீன் பாலாஜி நாதன் நேற்று காலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். நோயாளிகளின் நிலை மற்றும் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை அவர் கேட்டறிந்தார். ஏற்கனவே உரிய சிகிச்சை கிடைக்காமல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டி இறந்த  நிலையில் டாக்டர்களின் போராட்டம் நீடித்து வருவது, பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Tags : Government doctors ,
× RELATED மதுரையில் நாளை நடைபெறவிருந்த வெளி...