×

6 குமரி விசைப்படகுகள் கரை திரும்பவில்லை கடற்படை கப்பல்கள் மூலம் தேடுதல் பணி

நாகர்கோவில், அக்.31: கரை திரும்பாமல் உள்ள 6 விசைப்படகுகளில் உள்ள 120 மீனவர்களுக்காக கடலோர காவல்படை மற்றும் கடற்படையின் கப்பல்கள் வாயிலாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்னும் கரை திரும்பாமல் உள்ளனர். குளச்சல் மீன் பிடித்துறைமுகம், தேங்காப்பட்டினம் மீன்பிடித்துறைமுகம் மற்றும் தூத்தூர் மீன்துறை ஆய்வாளர் அலுவலகங்களில் 24ம் தேதி முதல் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு கரை திரும்பாத மீனவர்களை கண்டறியவும், அவர்களை கரை திரும்ப செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த படகுகளை தொடர்பு கொண்டு புயல் பற்றிய முன்னெச்சரிக்கை செய்திகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகுகள் துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன.

 அதே வேளையில் 6 படகுகள் மகாராஷ்டிரா ஆழ்கடல் பரப்பில் மீன்பிடிப்பில் உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 விசைப்படகுகள் மட்டும் தொடர்பில் இல்லாமல் உள்ளன. இதில் வள்ளவிளை பகுதியில் இருந்து 64 பேரும், வட இந்தியவர்கள் 38 பேரும் இந்த படகுகளில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே கடலோர காவல்படையின் கப்பல்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் வாயிலாக தொடர்பில் இல்லாத இந்த குமரி மாவட்ட விசைப்படகுகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் 35 நாட்கள் வரை மீன்பிடிக்க எடுத்துக்கொள்வது வழக்கம். போவதற்கு 10 நாள், வருவதற்கு 10 நாள், மீன்பிடிக்க 15 நாட்கள் எடுத்துக்கொள்வர். இவ்வாறு செல்கின்றவர்கள் அதற்கு முன்னதாக கரை திரும்புவது இல்லை. அவர்கள்தான் தற்போது தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில்தான் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்கள் தற்போது புயல் செல்லும் பாதையில் இல்லை என்பது தேடுதல் வேட்டையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்களை தொடர்பில் கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

Tags : Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து