×

பிசான நெல் சாகுபடிக்கு 1965 மெட்ரிக் டன் யூரியா நெல்லைக்கு வருகை வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

நெல்லை, அக். 31: பிசான பருவ நெல் சாகுபடிக்கு 1965 மெட்ரிக் டன் யூரியா உரம் நெல்லைக்கு ரயிலில் வந்தது. நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கும் வகையில் 1965 மெட்ரிக் டன் யூரியா உரம் சென்னை காமராஜர் துறைமுகத்தில் இருந்து ரயிலில் நெல்லை வந்தது. இதுகுறித்து நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ண பிள்ளை கூறியிருப்பதாவது: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்திறங்கிய 1965 மெட்ரிக் டன் யூரியா உரத்தில் நெல்லைக்கு 1392 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடிக்கு 416 மெட்ரிக் டன்னும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 121 மெட்ரிக் டன்னும், விருதுநகர் மாவட்டத்திற்கு 36 மெட்ரிக் டன்னும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறன்றன. கடந்த வாரம் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் மூலம் 690.3 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகள் நெல்லை வந்தது. எனவே வேளாண் பணிகளுக்கு தேவையான யூரியா விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்கும். இந்த உரம் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 330 மெட்ரிக் டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 378 மெட்ரிக் டன்னும் விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன பாளை. கிட்டங்கியில் 684 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தேவைக்கேற்ப தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் மண்வள அட்டை உர பரிந்துரை அடிப்படையில் உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது