×

டாக்டர்கள் போராட்டம் 6வது நாளாக நீடிப்பு நெல்லையில் புறநோயாளிகள் அவதி

நெல்லை, அக். 31: தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையாகவும், பிற மாநிலங்களில் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும். பட்ட  மேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர் கூட்டமைப்பினர் கடந்த 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6வது நாளாக போராட்டம் நீடித்தது.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா மேற்கொண்ட சாமியானா பந்தல் அகற்றப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஷெட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர். டாக்டர்கள் போராட்டம் காரணமாக புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் நேற்றும் பாதிக்கப்பட்டனர். அவசர அறுவை சிகிச்சைக்கு மட்டும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் சென்று வந்தனர்.

அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று நடந்த தர்ணா போராட்டத்தில் மருத்துவ ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் ராம கிருஷ்ணன், முத்துக்குமார், செல்வமுருகன், ஜான்சிங், அஷ்ரப்அலி, சரவணபிரகாஷ், சுதன், சித்தார்த்தன், ஜஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் 3 டாக்டர்கள் உண்ணாவிரதமும் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் நேற்று டாக்டர்கள் ராணி, ரதிதேவி, கனகவள்ளி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். இதுகுறித்து போராட்டக் குழு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அறவழியில் தொடர் போராட்டம் நடத்தும் எங்களை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. 10 சதவீதம் டாக்டர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுவதாக அரசு முதலில் அறிவித்தது. இப்போது 15 ஆயிரம் டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. அரசின் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் ெதாடரும்.’’ என்றனர்.

Tags : Doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை