×

சுரண்டையை சுற்றும் மோசடி கும்பல் சாட்டையை சுழற்றுமா காவல் துறை

சுரண்டை அக்.31: சுரண்டையில் நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரிப்பால் காவல்துறையினர் குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். நெல்லை மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரம் சுரண்டை. மக்களின் அயராத கடின உழைப்பு இன்று சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சுரண்டை மக்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை ஆசை காட்டி மோசம் செய்யும் வேலையில் சில மோசடி கும்பல் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் அதிகமான மோசடிகள் நடந்துள்ளது. சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி கிரேஸ் பால்தாயிடம் அரசு உதவித்தொகை வாங்கித் தருவதாக 5 பவுன் நகையை மர்ம நபர் திருடி சென்று விட்டனர். சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்தை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.மருக்கலாங்குளத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் (68) என்பவரை திருமண ஆசைகாட்டி நகை மற்றும் பணத்தை அபகரித்து சென்றனர். சுரண்டையை சேர்ந்த அழகு ரமா என்ற பெண் தன்னை ஆர்.ஐ.என கூறிக்கொண்டு சொகுசு காரில் வலம்வந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பத்துக்கும் மேற்பட்டோரிடம் 80 லட்சம் வரை மோசடி செய்துள்ளளார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் கந்துவட்டி வசூலிப்பதுபோல் வசூலித்து வருகின்றனர்.

இதுதவிர சுரண்டை நகரில் திடீர் என முளைத்த மனமகிழ் மன்றங்கள் தங்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டியால் மனமகிழ் மன்றங்களை சூறையாடிய சம்பவம் கடந்த மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாம்பவர்வடகரையில் மகளிர் சுயஉதவி குழு பெயரில் ரூ.1லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் கொடுத்த சம்பவம் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்களை விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. காலை 6 மணி முதலே சுரண்டை நகரின் சுற்றுப் பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர். எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு அரசு வேலையை பொது மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதனால் ஆசிரியர் வேலைக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க சிலர் தயாராக உள்ளனர்.

அரசு வேலையின் மீதுள்ள மோகத்தை சாதகமாக பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக சிலர்  மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி விட்டது. நெல்லை மற்றும் தென்காசியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலங்கங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல நபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் குற்றவாளிகள் குறித்த விபரங்களை வெளியிடவில்லை என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர். இதுபோன்ற மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் தயவு தாட்சன்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டினால் மட்டுமே அவர்களிடம் மேலும் பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : gang ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....