×

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் 7 வீடுகள் சேதம் மழையால் சேதமடைந்த குளங்களை மணல் மூடையால் சீரமைத்த மக்கள்

ஓட்டப்பிடாரம், அக். 31:  ஓட்டப்பிடாரம் தாலுகாவில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையில் 7 வீடுகள் சேதமடைந்தன. மேலும் உடைப்பு ஏற்பட்ட பல குளங்களில் பொதுமக்கள் மணல் மூடைகள் அடுக்கி சரிசெய்தனர்.  ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், பசுவந்தனை, மணியாச்சி, குறுக்குச்சாலை, எப்போதும்வென்றான்  மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பெய்த கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் எப்போதும்வென்றான் அணையானது 2 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளது. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் உள்ள 7 வீடுகள் பகுதியளவு சேதடைந்தன.   இதேபோல் மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் எப்போதும்வென்றானை அடுத்த ஆதனூரில் இருந்து மிளகுநத்தம் செல்லும் தாம்போதி பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட இரு கிராம மக்களும் வெளியில் எங்கும் செல்லமுடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இதே காட்டாற்று வெள்ளம் தொடர்ந்து கொல்லம்பரும்பு வழியாக சென்று முள்ளூர், முத்துக்குமாரபுரம் செல்லும் தாம்போதி பாலம் வழியாகச்சென்று கடலுக்கு சென்றது. இதனால் காட்டாற்று வெள்ளத்தில் முள்ளூர் முத்துக்குமாரபுரம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலமானது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.    

இதேபோல் குறுக்குச்சாலையை அடுத்துள்ள கொல்லம்பரும்பு கண்மாயில் வழக்கம்போல் அதன் கரைகளில் உடைப்பு ஏற்படவே அதிகப்படியாக மழை நீரானது வெளியேறிச்சென்றது. இதனையடுத்து அந்த கிராமத்தினர் மணல் மூடைகளை அடுக்கியபடி அதன் உடைப்பை சரி செய்தனர்.  மேலும் ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரத்தில் உள்ள சிறிய கண்மாய் உடைந்ததால் அதிலிருந்த மழை நீர் அதிகளவு வெளியேறியது. இதனால் பொதுமக்கள் மணல் மூடாகளையும் சரள் மண் போட்டும் உடைப்பை சரிசெய்தனர். இந்த குளத்திலிருந்து வெள்ள நீர் வெளியேறிச்சென்றதால் அதனை சுற்றி பயிர் செய்த விளை நிலங்களில் மக்காச்சோள பயிர்கள் மற்றும் உளுந்து உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
  இதனிடையே ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தெற்கு பரும்பூரில் மழை நீர் வெளியேறிச் செல்லும் வழிகளில் அடைப்பையும் ஆக்கிரமிப்பும் உள்ளதால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்திற்கு  திரண்டுவந்தனர். அங்கிருந்த பிடிஓ மற்றும் அதிகாரிகளிடம் அதுபற்றி முறையிட்டனர். மேலும் முறையான கால்வாய்கள் உடனே அமைக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. நேற்று காலை நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 119 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் புதியம்புத்தூர் அருகே ராஜாவின்கோவில் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஊர் அருகே அமைக்கப்பட்டுள்ள தாம்போதி பாலத்தை மழைநீர் மூழ்கடிக்கும்படி சென்றது. இவ்வாறு தாம்போதி பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் கிராம மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.  தகவலறிந்து விரைந்து வந்த சண்முகையா எம்.எல்.ஏ. மழையால் பெருக்கெடுத்த தண்ணீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மழை காலத்தில் பெருக்கெடுக்கும்  தண்ணீரால் இப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, வெள்ள நீர் செல்லக்கூடிய இந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் உயர்நிலைப் பாலம் அமைத்துதர கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Tags : homes ,area ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...