×

தொடர் மழை, கடல் சீற்றத்தால் ஆலந்தலையில் மீண்டும் கடலரிப்பு

திருச்செந்தூர்,  அக். 31:  தொடர் மழை, கடல் சீற்றத்தால் ஆலந்தலையில் மீண்டும் கடல்  அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் நிலவுகிறது. திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை மீனவக் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வரும் நிலையில் சமீபகாலமாக இப்பகுதியில்  அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் கரைப்பகுதி அரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோர வீடுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். தற்போது வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் ஆலந்தலையில் கடல்  சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் கரையிலிருந்து 7 அடி தொலைவுக்கு மீண்டும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக 3வது நாளாக நேற்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடல் சீற்றத்தால் படகுகளை கரையோரம் நிறுத்தாமல் சற்று தள்ளி நிறுத்தி வைத்துள்ளனர். இங்கு தூண்டில் வளைவு அமைக்குமாறு இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இனியும் தாமதிக்காமல் தூண்டில் வளைவு அமைத்து கொடுத்தால் கடல்  அரிப்பில் இருந்து ஓரளவுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு