×

விளாத்திகுளத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை வைப்பாற்றில் காட்டாற்று வெள்ளம்

விளாத்திகுளம், அக். 31: விளாத்திகுளத்தில் விடிய விடிய  கொட்டித் தீர்த்த மழையால் வைப்பாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழையால் பெரும்பாலான ஊரணிகள், கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் விடிய விடிய கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்றும் மழை நீடித்தது. விளாத்திகுளம் ஒன்றியத்தில் சுமார் 220 ஊரணிகளில் 170க்கும் மேற்பட்ட ஊரணிகள், கண்மாய்கள் நிரம்பியுள்ளன. விளாத்திகுளம் பிள்ளையார்நத்தம், கழுகாசலபுரம், சிங்கிலிபட்டி, கல்குமி, மீனாட்சிபுரம், மார்த்தாண்டம்பட்டி சக்கம்மாள்புரம், பட்டியூர் கம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில் கண்மாய்கள் நிரம்பும் நிலையில் உள்ளன. தொடர்ந்து ஓரிரு நாட்கள் மழை நீடித்தால் தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் நிலவுகிறது.

 இதனிடையே கனமழை காரணமாக விளாத்திகுளம் மீனாட்சிபுரம், மார்த்தாண்டம்பட்டி கண்மாய்கள், நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், பிடிஓ கந்தவேல் மற்றும் வருவாய்த்துறையினர் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மணல் மூடைகளை அடுக்கி கரைகளை பலப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். கோடாங்கிபட்டி ஊரணி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழை காரணமாக விளாத்திகுளம் வைப்பாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. விளாத்திகுளம் பகுதியில் விவசாயிகள் சோளம், கம்பு, பருத்தி, மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் பயிர்கள் சேதமாகும் அபாயமும் நிலவுகிறது.

  இதனிடையே விளாத்திகுளம் காமராஜர்நகர், அம்பாள் நகர், சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்த தண்ணீர் அங்குள்ள வீதிகள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் பரிதவித்தனர். இதையடுத்து இப்பகுதிகளை சின்னப்பன் எம்.எல்.ஏ., பஞ்சாயத்து செயல் அலுவலர் தனசிங் உள்ளிட்டோர் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டனர். புதூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 413 ஊரணிகளில் 300 ஊரணிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதே போல் 14 கண்மாய்களில் 10 கண்மாய்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதையடுத்து ஊரணி மற்றும் கண்மாய்களை அதிகாரிகள் பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனிடையே விளாத்திகுளம் அருகேயுள்ள கோடங்கிபட்டி கிராமத்தில் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் பரிதவித்தனர்.

   இடிந்து விழுந்த தரைநிலை பால தடுப்புச்சுவர்:  இதனிடையே தொடர் மழையால் விளாத்திகுளம் அடுத்த வெள்ளையம்மாள்புரத்தில் இடிந்துவிழுந்த தரைநிலைப் பாலத்தின் தடுப்புச்சுவரை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒன்றியத்தில் 170க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக பொம்மையாபுரம், சக்கம்மாள்புரம், டி.சுப்பையாபுரம், கமலாபுரம், வீரபாண்டியாபுரம், படர்ந்தபுளி தெற்கு வடக்கு ஊரணிகள் முழுமையாக நிரம்பின. இதையடுத்து தண்ணீர் வெளியேறாமல் தடுக்கும்பொருட்டு ஊரணியின் கரைகளில் மணல் மூடைகளை கொண்டு அடுக்கி பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை பிடிஓ தங்கவேல், தாசில்தாா் ராஜ்குமாரும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 இதனிடையே தொடர் மழையால் வெள்ளையம்மாள்புரம் கிராமத்தில் தரைநிலைப் பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து ரூ.8 லட்சத்தில் புதிய பாலம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் படர்ந்தபுளி கிராமத்தில் உள்ள ஊரணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி, திட்ட இயக்குநர் தனபதி, பாலஹரிஹரமோகன், சின்னப்பன் எம்.எல்.ஏ., பிடிஓ தங்கவேல் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து பிடிஓ தங்கவேல் கூறுகையில், ‘‘தொடர் மழை பெய்தாலும் கண்மாய்கள் மற்றும் ஊரணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.

Tags : Flooding ,
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!