×

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் முக்கிய சாலைகள் துண்டிப்பு கிராம மக்கள் கடும் அவதி

குளத்தூர், அக். 31: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால்  கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால்  கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக குளத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களான வேடநத்தம், வெங்கடாசலபுரம், வள்ளிநாயகிபுரம், கொல்லம்பரம்பு, முள்ளூர், த.சுப்பையாபுரம், முத்துக்குமாரபுரம், வீரபாண்டியாபுரம், பனையூர், வேப்பலோடை, தருவைகுளம், வைப்பார், சூரங்குடி, வேம்பார், பூசனூர், புளியங்குளம், கெச்சலாபுரம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெய்யத் துவங்கிய மலை தொடர்ந்து விடாது கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் உள்ள காட்டு தண்ணீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து கண்மாய், குளம், குட்டைகளில் நிரம்பியது.

மேலும் தொடர் மழையால் வேடநத்தம் சாலையில் உள்ள தரைமட்ட பாலம் இரண்டும் மூழ்கி பாலத்திற்கு மேல் 5அடிக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்தது. இதனால் நேற்று காலை முதல் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இச்சாலை இராமேஸ்வரத்திலிருந்து திருச்செந்தூர், கன்னியாகுமரி செல்லும் முக்கிய சாலையாகும். மேலும் அருகிலுள்ள முத்துக்குமாரபுரம் கிராமத்திலிருந்து முள்ளூர் செல்லும் சாலையில் உள்ள பாலம் கடந்த பருவமழைக்கு சேதமடைந்தநிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் கன மழைக்கு காற்றாற்று வெள்ளம்போல் அப்பாலத்தை அரித்து சென்றதுடன் அவ்வழி போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் மூள்ளூர், அய்யர்பட்டி கிராமமக்கள் போக்குரத்து சிரமங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கன மழைக்கு பாதிக்கப்பட்டுள்ள இவ்வழி தடங்களை மழை குறைந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   விளாத்திகுளம்: விளாத்திகுளம்- தூத்துக்குடி சாலையோரம் உள்ள மந்திகுளம் கிராமத்தில்  300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகள். கிராம மக்கள்,  தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்குதான் சென்றுவர வேண்டியுள்ளது.  இதனிடையே தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மந்திகுளம் கிராமத்தில் உள்ள தார்சாலை 150 மீட்டர் அளவுக்கு சேதமடைந்து துண்டிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் வேறு எந்த பகுதிக்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.  இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட விளாத்திகுளம் பிடிஓ தங்கவேல், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.    சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டாரத்தில் நேற்று காலை முதல் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்நிலையில் சாத்தான்குளம் அடுத்த வடக்கு உடைப்பிறப்பில் தங்கபாண்டி (85) என்பவரது  குடிசை வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து வெளிபக்கமாக விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த தங்கபாண்டி, அவரது மனைவி காயமின்றி தப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த பள்ளக்குற்ச்சி விஏஓ முத்துலிங்கம் பார்வையிட்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

   புதுக்கோட்டை: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் கழுகுமலை, கடம்பூர், ஒட்டநத்தம், மணியாச்சி, கொம்பாடி, செக்காரக்குடி, தளவாய்புரம், தட்டப்பாறை முதலான பல கிராமங்களில் இருந்து பெருக்கெடுத்த தண்ணீர் புதுக்கோட்டை பாலம் வழியே காட்டாற்று வெள்ளமாக கோரம்பள்ளம் குளத்தை நோக்கி பாய்ந்து வருகிறது. இதனால் கோரம்பள்ளம் குளம் வேகமாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி 24 மதகு கொண்ட கோரம்பள்ளம் குளத்தின் அணைக்கட்டிலிருந்து சப்- கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று காலை ஒரு மதகு திறக்கப்பட்டு உபரி நீர் உப்பாறு ஓடையில் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், மதியம் கூடுதலாக 2 மதகுகள் திறக்கப்பட்டன. 3 மதகுகள் திறக்கப்பட்டதால், உப்பாற்று ஓடையின் குறுக்கே உள்ள அத்திமரப்பட்டி - காலான்கரை பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. மழை தொடர்ந்து நீடித்தால், கூடுதலாக ஓரிரு மதகுகளை திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு திறந்தால், உப்பாற்று ஓடையின் வடபக்க கரையில் உடைப்பு ஏற்படலாம் என்றும், காலான்கரை, வீரநாயக்கன்தட்டு, தெர்வல்நகர் முதலான ஊர்களை வெள்ளம் சூழும் அபாயம் நிலவுகிறது. இதையடுத்து அங்குள்ள மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...