×

குளம்போல் தேங்கிய மழைநீர் விஷஜந்துக்களின் பீதியில் குழந்தைகளுடன் பெற்றோர் தவிப்பு

திருச்சி, அக். 31: திருச்சி கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி, அசோக்நகரில் 2 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதில் விஷஜந்துக்களின் பீதியால் குழந்தைகளுடன் பெற்றோர் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் புதிதாக ஒரு புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதனால் தமிழக மீனவர்கள் கேரளா கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது. இதில் நேற்று முன்தினம் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நேற்று காலை முதலே லேசான தூறலோடு மழை பெய்ய துவங்கியது. மதியம் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழையில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

இந்த பலத்த மழையினால் கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி மற்றும் அசோக் நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது.
மேலும் இப்பகுதியில் முறையான தார் சாலை இல்லாததால் மண் சாலையில் மழை நீர் தேங்கி நின்றதால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜெய்குமார் என்பவர் கூறுகையில், இந்த பகுதியில் சுமார் 400 குடும்பத்தினர் உள்ளனர். கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையினால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய நீரில் கொசு அதிகளவில் உற்பத்தியாகிறது. மேலும் சாக்கடை நீருடன் மழை நீர் வீட்டு வாசலில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தவளை, பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் வருகிறது. இதனால் கைக்குழந்தைகளுடன் பயத்துடன் இருந்து வருகிறோம். தேங்கிய சாக்கடை நீரால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. வேலைக்கு மற்றும் பள்ளி செல்வோர் கடும் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த பகுதியில் முறையான சாக்கடை வசதி மற்றும் தார் சாலை அமைத்து தரவேண்டும் என்றார்.

Tags : Parents ,children ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்