×

விருதுநகரில் தொடர்மழையால் வீடு, அரசு போக்குவரத்து பணிமனை, பள்ளிகளுக்குள் புகுந்த மழைநீர்

விருதுநகர், அக். 31: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று முழுவதும் விட்டு, விட்டு பெய்த தொடர் மழையால் வீடுகள், பள்ளிகள், அரசு போக்குவரத்து பணிமனைக்குள் மழைநீர் புகுந்தது. தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளானது. மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு மி.மீ வருமாறு: அருப்புக்கோட்டை 50, சாத்தூர் 80, திருவில்லிபுத்தூர் 45.60, சிவகாசி 41, விருதுநகர் 49, திருச்சுழி 40, ராஜபாளையம் 20, காரியாபட்டி 71.60, வத்திராயிருப்பு 74.20, பிளவக்கல் 66.40, வெம்பக்கோட்டை 25, கோவிலாங்குளம் 47.60 மி.மீ மழை பதிவாகியது. இரவு தொடங்கி தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. அரசு பள்ளிகளில் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கிய நின்றததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  விடுமுறை விடப்பட்டது.பள்ளிகள் விடுமுறை மற்றும் தொடர்மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. பஸ்களும் மழையால் இயக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டன.

விருதுநகரில் இரவு தொடங்கி நேற்றும் பெய்த தொடர் மழையால் நகரில் தாழ்வான பகுதிகளான பாவாலி ரோடு, ராமமூர்த்தி ரோடு, சாத்தூர் ரோடு, பழைய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு பகுதிகளில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. பெத்தனாட்சி நகரில் தாழ்வான 4 வீடுகளுக்குள் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பாவாலி ரோட்டில் உள்ள நகராட்சி முஸ்லீம் பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது. பள்ளிக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கும் இடைப்பட்ட மழைநீர் ஓடையில் கழிவுநீர் ஓடி குப்பைகள் அடைத்து இருப்பதால் பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மதுரை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை கடந்த பெய்த மழையின்போது மழைநீர் உள்ளே புகுந்து டீசல் சேமிப்பு மையம் சேதமடைந்தது. இதை தொடர்ந்து போக்குவரத்து பணிமனை முன்பாக பெரிய அளவில் மழைநீர் வாறுகால் கட்டப்பட்டுள்ளது. தொடர்மழையால் பணிமனையில் பெய்த மழை செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் மதியம் பெய்ய துவங்கி விட்டு, விட்டு பெய்த மழை நேற்று அதிகாலை முதல் தொடர்மழையாக மாறியது. மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை இடைவெளி விட்டு நேற்று முழுவதும் விடாமல் தொடர்ந்து பெய்து வருகிறது.

Tags : schools ,government transport workshops ,Virudhunagar ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...