×

தனியார் லாட்ஜ் செப்டிக் டேங்கிலிருந்து வாறுகாலில் கழிவுநீர் திறப்பதால் துர்நாற்றம்

சிவகாசி, அக். 31:சிவகாசியில் வாறுகாலில் திறந்துவிடப்படும் தனியார் லாட்ஜ் செப்டிக் டேங் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க சுகாதார திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தூய்மை பாரதம் திட்டத்தில் சிவகாசி நகராட்சியில் குப்பை கழிவுகளை சாலையில் கொட்ட நகராட்சி நிர்வாகம் தடை விதித்து நடமாடும் வாகனங்கள் மூலம் குப்பைகழிவுகளை சேகரித்து உரம் தயாரித்து வருகிறது. நகராட்சியில் சுகாதார பணிகளை மேம்படுத்த தற்காலிக சுகாதார பணியாளர்கள் 250 பேர் பணி நியமிக்கப்பட உள்ளனர். சுகாதார பணிகளை தினமும் கண்காணிக்க மாவட்ட நிர்வாகமும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான லாட்ஜ் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. உணவு விடுதி, பார் வசதியும் உள்ளது. இதனால் தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த லாட்ஜில் 30க்கும் மேற்பட்ட கழிவறைகள் உள்ளன. இந்த கழிவறை செப்டிக் டேங்க் கழிவுநீர் தினமும் பகல் நேரங்களில் லாட்ஜ் முன்புள்ள திறந்தவெளி வாறுகாலில் திறந்து விடப்படுகிறது. ஒரு மணிநேரம் தினமும் காலை செப்டிடேங்க் கழிவுநீர் வாறுகாலில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த லாட்ஜ் சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ளதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் அலுவலகம், குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். செப்டிக் டேங்க் கழிவுநீர் திறந்தவெளி வாறுகாலில்  விடப்படுவதால் நோய் பரவும் ஆபத்து உள்ளது.வாறுகாலில் செப்டிக் டேங்க் கழிவுநீர் விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lodge ,
× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...