×

தொடர் மழையால் வெள்ளம் போல தண்ணீர் தேங்கிய வெள்ளைக்கோட்டை பகுதி

அருப்புக்கோட்டை, அக். 31:அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை வாழவந்தம்மன் கோவில் பகுதியில் தொடர் மழையால் வெள்ளம் போல மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லமுடியாமல் அவதியடைந்து
வருகின்றனர். அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை வாழவந்தான் பகுதியில் இரண்டு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பாலிடெக்னிக் உள்ளது. இந்த பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இதை கடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர்.பள்ளிக்கு சைக்கிள் மற்றும் நடந்து செல்லும்போது தேங்கியுள்ள மழைநீரில் விழுந்து விடுகின்றனர். மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இந்த பகுதியை கடந்துதான் செல்லவேண்டி உள்ளது. மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து கிடப்பதால் நடைபயிற்சிக்கு செல்பவர்களும் செல்லமுடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். கனரக வாகனங்கள் இதை கடக்கும்போது நடந்து செல்பவர்களின் மீது சேறும் சகதியும் வாறிவிட்டு செல்கிறது. முன்பு இதேபோல் மழைவெள்ளம் சூழ்ந்தநிலையில் இப்பகுதி மக்கள் மழைநீர் தேங்காமல் நிற்க நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடித்து போராட்டம் நடத்தினர்.

பலமுறை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. நெடுஞ்சாலைத்துறை மெயின் ரோட்டில் ஒருபுறம் வாறுகால் அமைத்தால் தேங்கும் மழைநீர் வாறுகால் வழியாக சென்று விடும். நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக உள்ளது. எனவே நகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து இந்த பகுதியில் பல வருடங்களாக மழைநீர் ரோட்டில் தேங்கி பொதுமக்கள் செல்லமுடியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு முறையான வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் வர்த்தக சங்கத்தெரு, சேவுகன் செட்டியார் தெரு பகுதிகளிலும் மழை பெய்தால் முறையான வாறுகால் இல்லாததால் மழைநீரும், கழிவுநீரும் வீடுகளுக்குள் சென்று விடுகிறது. எனவே இந்த பகுதிகளிலும் முறையான வாறுகால்கள் கட்ட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED சக்ரா ஆசனத்தில் 50 மீட்டர் காரை கயிற்றால் இழுத்து மாணவன் உலக சாதனை