×

மூணாறு அருகே சிறுமி கொலை 52 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் அலட்சியம் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

மூணாறு, அக்.31: மூணாறு அருகே  குண்டுமலை எஸ்டேட் பகுதியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 52 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.மூணாறு அருகே கேடிஹச்பி நிறுவனத்திற்கு சொந்தமான குண்டுமலை எஸ்டேட் பகுதியில் கடந்த செப்.9ம் தேதி 8 வயது சிறுமி கழுத்தில் கயிறு இறுக்கி இறந்த கிடந்தார். ஊஞ்சல் விளையாடும் போது சிறுமி கயிறு இறுக்கி இறந்ததாக அப்பகுதியினர், மூணாறு போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால், போலீசார் நடத்திய சோதனையில் சிறுமி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மூணாறு டிஎஸ்பி  விசாரணை  மேற்கொண்டார். மேலும் மூணாறு, ராஜக்காடு, உடும்பன்சோலை சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டர் தலைமையில் 11 பேர் அடங்கிய குழு கொலை நடந்த எஸ்டேட் பகுதியில் தங்கி விசாரணை நடத்திய போதிலும் குற்றவாளிகள் குறித்து எந்த  துப்பும்  கிடைக்கவில்லை.

 மேலும்  தடயவியல் நிபுணர் குழு டிஎன்ஏ பரிசோதனை செய்தும் இதுவரை குற்றவாளியை போலீசாரால் பிடிக்க  முடியாதது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சம்பவம் நடந்து 52 நாட்கள் கடந்த நிலையில் குற்றவாளியை பிடிப்பதில் காலம் தாழ்த்துவது போலீசின் வீழ்ச்சியை  காட்டுவதாக மூணாறு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளியை பிடிப்பதில் முயற்சி எடுக்காத டிஎஸ்பி, மூணாறில் பூந்தோட்டங்கள் அமைப்பதில் அக்கறை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஏ.கே மணி  குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வாரத்திற்குள் குற்றவாளியை பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்த ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

Tags : party ,Congress ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீட்டு...