×

உத்தமபாளையத்தில் மழைச்சேத விபரங்களை கண்காணித்த வருவாய்த்துறை

உத்தமபாளையம், அக்.31: உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் மிகவும் அபாயகரமான இடங்களை கண்காணித்து பாதிப்புகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய உத்தமபாளையம் சப்-கலெக்டர் உத்தரவிட்டார். உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கூடலூர் முதல் தேனி பழனிசெட்டிபட்டிவரை பாய்கிறது. ஆற்றின் கரையோரங்களில் இரண்டு புறமும் மக்கள் குடியிறுப்பு பகுதிகளில் மழை நீரோ அல்லது ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரோ பாதிப்பை அடையாமல் இருக்க தேவையான உள்ளூர் விஏஓக்கள், ஆர்ஐ, மண்டல துணை வட்டாட்சியர்கள், 24 மணிநேரமும் அலார்ட்டாக இருக்க உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.  இதே போல் இக்கோட்டத்தில் போடிமெட்டு மலைச்சாலை, ஹைவேவிஸ் மலைச்சாலை, கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலைகள் உள்ளன.

இதில் மழையினால் நிலச்சரிவோ, பாறைகள் உருளுவதோ இருக்கிறதா என்பதை கண்காணித்திடும் வகையில் தேனி டிஆர்ஓ கந்தசாமி, சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்காத வகையில் உடனடியாக சரிசெய்திடும் வகையில் ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் கால்வாய்கள் அதிகம் உள்ள போடி, உத்தமபாளையம் தாலுகாவில் கரையோரங்களில் மழை தண்ணீர், வெள்ள நீர் அதிகம் வந்தால் கரைகளில் உடைப்புகள் இருக்கிறதா என கண்காணிக்கப்பட்டு இதனை பற்றிய தகவல்களை உடனடியாக அனுப்பிட உத்தரவிடப்பட்டது. உத்தமபாளையம் கோட்டத்தில் பெய்த மழையினால் பாதிப்பு எதுவும் இருந்தால் உடனடியாக தகவல் சொல்லிடுமாறு உத்தமபாளையம் சப்-கலெக்டர் அறிவுறுத்தி 24 மணிநேர உஷார் நிலையை அறிவித்ததை அடுத்து வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Rainfall ,Uthamapalayam ,
× RELATED சென்னைக்கு வெள்ள ஆபத்து; தொடர் கண்காணிப்பு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்