×

அழகப்பா பல்கலையில் தொல்பொருள் அருங்காட்சியகம்

காரைக்குடி, அக்.31: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.4.50 கோடியில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுதுறை சார்பில் கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் என் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. வரலாற்றுத்துறை தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், கீழடியில் கிடைத்த ஆதாரங்கள் வரலாற்று ஆய்விற்கு பெரிதும் பயன்படும். கீழடி ஆய்வு சம்பந்தப்பட்ட கருத்தரங்கம் முதன்முதலாக இப் பல்கலைக் கழகத்தில் நடப்படுவது பாராட்டக் கூடியது. இந்திய கலாச்சாரம் மிகவும் தொன்மையானது. இதற்கு பல இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான நாகரிகம் அசோகர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு கீழடி அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள் சிறந்த ஆதாரமாக உள்ளன. தமிழகத்தின் வரலாற்றை பற்றி அறிந்து கொள்ள இதுவரை இலக்கிய சான்றுகளே உள்ளன. தற்போது கீழடியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம் பண்டைய தமிழர்கள் தமிழ் வடிவ எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.

அசோகரது காலத்திய எழுத்து பிராமி எழுத்து என அழைக்கப்படுவது போல் கீழடியில் கிடைத்த எழுத்து வடிவங்கள் தமிழி என அழைக்கப்படுகிறது.வரலாற்றினுடைய முதுகெலும்பு தொல்லியல் சான்றும் கல்வெட்டு சான்றும் ஆகும்.கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை அறிந்து கொள்ள இளைய சமுதாயத்தினர் முன்வர வேண்டும். தமிழக வரலாறு ஆய்வினை மேற்கொள்பவர்களுக்கு கீழடி ஆய்வு பெரும் உந்துதலை அளித்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் அருங்காட்சியகம் ரூ.4.50 கோடியில் அமைக்க பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் தொல்பொருள் ஆய்வின் மூலம் கிடைத்த பொருட்களை முறையாக பாதுகாத்து வைக்க இந்த அருங்காட்சியகம் பயன்படும்.
இப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஆசிரியர்கள், மாணவர்கள் கீழடியில் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கு அரசின் அனுமதி விரைவில் கிடைக்கும் என்றார். இதில் வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜவேலு, கலைப்புல முதன்மையர் முருகன், தொல்லியல் ஆய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, ஓய்வு பெற்ற தொல்பொருள் அதிகாரிகள் தரன், முனைவர் பூங்குன்றன், தொல்லியல் துணை நிபுணர் சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.

Tags : Archaeological Museum ,Alagappa University ,
× RELATED உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு