×

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் கரும்புகையை கக்கி செல்லும் அரசு பஸ், வாகனங்கள் அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

தொண்டி, அக்.31:  அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் கரும்புகையை கக்கி கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து துறையினர் உடன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, திருவாடானை, முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், சத்திரக்குடி பகுதிகளில் டூவிலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏராளமாக உள்ளன. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கில் செல்கின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புகையை கக்கி செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வது கிடையாது. புதிய வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பரிசோதனை செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

ஆனால் பழைய வாகனங்கள் சரியாக பராமரிக்கால், கரும்புகையை கக்கியவாறு செல்கின்றன. லாரிகள், சரக்கு வாகனங்கள், வாடகை வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆண்டிற்கு ஒரு முறை தகுதி சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் போது, புகை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும் இதில் எந்த விதிமுறையும் கடைபிடிக்க படுவதில்லை. ஆனால் பெரும்பாலும் அரசு பஸ்களில் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறுகின்றனர். தினந்தோறும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் வாகனங்கள் கரும்புகையை கக்குவதால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்களும் நடக்கின்றன. இதனால் அவ்வப்போது வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...