×

ஆபத்தை ஏற்படுத்தும் சாலையோர குளங்கள் தடுப்புவேலி அமைக்கப்படுமா?

தொண்டி, அக்.31:  நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள குளத்திற்கு எவ்வித தடுப்பு வேலியும் கிடையாது. வளைவில் இருப்பதால் வாகனங்கள் குளத்தில் உள்ளே புகும் நிலை உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு தடுப்பு வேலி அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை காசியார்குளம் கிழக்கு கடற்கரை சாலையில் வளைவு உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த மாதம் இந்த குளம் தூர்வாரப்பட்டது. இதனால் குளம் மிகவும் ஆழமாக உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக பெய்த மழை நீரை வீணாக்காமல் ஊராட்சியின் சார்பில் துரித பணி செய்து தண்ணீரை நிறைத்து விட்டனர். இப்பகுதியில் இந்த குளம் மட்டுமே நிரம்பியுள்ளது குறிப்பிடதக்கது. கடந்த வருடம் தண்ணீர் இல்லாத சமயத்தில் டாக்டர் ஒருவரின் கார் குளத்தின் உள்ளே சென்று விபத்தில் சிக்கியது. இதையடுத்து சுற்றுலா சென்ற வேன் ஒன்றும் உள்ளே சென்று கவிழ்ந்தது. அப்போது தண்ணீர் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆனால் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் வளைவில் இருப்பதால், ஆபத்தை தவிர்க்கும் பொருட்டு இக்குளத்தில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கூறியது, ஊருக்கு வெளியே இருப்பதால் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. அதிவேகமாக வரும் வாகனங்கள் வளைவில் வளையும் போது கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள்ள சென்று விடுகிறது. தற்போது தண்ணீர் நிரைந்துள்ளதால் தடுப்பு வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்வெல் குழிபோல் இதுவும் ஆபத்தை ஏற்படுத்தினால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லை. அதற்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை