×

இதுவரை 8 குழந்தைகள் வரை மீட்டும் சுஜித்தை மட்டும் ஏன் காப்பாற்ற முடியவில்லை? நவீன கருவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட மணிகண்டன் விளக்கம்

மதுரை, அக்.31: இதுவரை 8 குழந்தைகள் வரை மீட்டும் சுஜித்ைத மட்டும் ஏன் மீட்க முடியவில்லை என்ற காரணத்தை, நவீன கருவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட மதுரை மணிகண்டன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டு பட்டியில் 500 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் விழுந்தான். குழந்தையை மீட்க மதுரையிலிருந்து மணிகண்டன் வரவழைக்கப்பட்டார். எனினும் இவரது முயற்சி பலனளிக்கவில்லை. மூடப்படாத ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய பலரை தனது கருவியால் மணிகண்டன் மீட்டுள்ளார். ஆனால், நடுகாட்டு பட்டியில், குழந்தை சிக்கி இருந்த விதத்தாலும், கருவி அளவு பெரியதாலும் பலன் கிடைக்கவில்லை. மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஐடிஐ ஆசிரியரான இவரது சொந்த ஊர் கோவில்பட்டி நாலாண்டி புதூர். நெல்லையில் ஐடிஐ பிட்டர் படித்த இவர், சோலார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் கண்டுபிடித்தார். சில ஆண்டுகள் முன்பு, தனது 3 வயது குழந்தை தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மீட்கப்பட்டது. எனவே, ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்க பிரத்யேக கருவி ஒன்றை 2003ல் வடிவமைத்தார்.

பேட்டரியுடன் கூடிய கேமரா, ரத்த அழுத்தம் கண்டறியும் மருத்துவக்கருவி, குழந்தையை லேசாக கைபிடித்து தூக்கும் ரோபோ உபகரணத்துடன் இக்கருவி 2013ல் நவீனப்படுத்தப்பட்டது. ஐந்து கிலோ எடையுள்ள இக்கருவியானது, 50 கிலோ எடை வரையுள்ள குழந்தையை தூக்கும் திறன் கொண்டதாகும். ரூ.40 ஆயிரம் செலவில் இக்கருவி வடிவமைக்கப்பட்டது. இக்கருவியால் நெல்லை சங்கரன்கோவிலில் ஒரு குழந்தை முதலில் மீட்கப்பட்டு, கர்நாடகா, ஆந்திரா என இதுவரை 8 குழந்தைகள் வரை மீட்கப்பட்டிருக்கிறது. தேசிய பேரிடர் துறையினருக்கும் தரப்பட்டுள்ளது. இதற்கென பல்வேறு விருதுகளையும் மணிகண்டன் பெற்றுள்ளார். ‘அறம்’ தமிழ் சினிமா மூலமும் இவரும், இவரது கருவியும் பிரபலமானது. இக்கருவி மூலம் எப்படியும் மீட்டு விடுவார் என்ற நம்பிக்கை நிலவிய சூழலில், ஆழ்துளைக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் வில்சனை இக்கருவியால் மீட்கும் முயற்சி தோற்றுப்போனது அனைத்து தரப்பினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மணிகண்டன் கூறும்போது, ‘‘திருச்சி கலெக்டர் அழைப்பின் பேரில் மதுரை தீயணைப்பு அலுவலகத்தினர் அனுப்பிய காரில் நடுகாட்டுபட்டியை 100 கிமீட்டர் வேகத்தில் சென்றடைந்து, குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினேன். நான்கரை அங்குலத்திற்குள் இருந்த ஆழ்குழாய்க்குள், எனது 8 அங்குல கருவியை செலுத்த முடியாததால், மணப்பாறை லேத் பட்டறையில் வைத்து அளவை குறைத்து கொண்டு வந்து மீட்பு பணியை மேற்கொண்டேன். குழந்தை சிக்கிய இடத்தில் சிறு இடைவெளியும் இல்லாததால், எனது இயந்திரத்தால் குழந்தையின் தலைப்பகுதியை பிடிக்க முடியவில்லை. முயற்சி தோற்றுப்போனது. குழந்தையை உயிருடன் மீட்க முடியாதது மாறாத வருத்தத்தை, வலியைத் தந்திருக்கிறது’’ என்றார்.

Tags : children ,Sujith ,Manikandan ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்