×

பல ஆண்டுகளுக்கு பிறகு வடகரை கால்வாயில் ஓடுது தண்ணீர் திருமங்கலம் மக்கள் மகிழ்ச்சி

திருமங்கலம், அக்.31: திருமங்கலத்தில் பெய்த மழையால் பல ஆண்டுகளுக்கு பின்பு வடகரை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணிமுதல் மதியம் வரையில் தொடர்ந்து மழை பெய்தது. மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்தது. திருமங்கலத்தில் கழிவுநீர் வாறுகாலாக ஓடிய வடகரைகால்வாயில் பல ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வடகரை கால்வாயில் சமீபத்தில் மதகு மற்றும் ஷெட்டர்கள் பொதுப்பணித்துறையினரால் பழுதுபார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆஞ்சநேயர் கோயில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட ஷெட்டர் உயரம் குறைவாக இருந்ததால் குண்டாறுக்கு பிரியும் கால்வாயில் ஷெட்டரை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் அமைக்கப்பட்ட ஷெட்டர் கால்வாயை தூர்வாரியபோது உடைந்துவிட்டது. இதனை சமீபத்தில் பொதுப்பணித்துறையினர் சரிசெய்தனர். ஆனால் வடகரைகால்வாயின் உயரத்தை காட்டிலும் ஷெட்டர் உயரம் குறைவாக அமைக்கப்பட்டதால் ஷெட்டரை தாண்டி தண்ணீர் வெளியேறுகிறது. இருப்பனும் குண்டாறுக்கு தண்ணீர் போவதால் பிரச்னையில்லை’’ என்றனர். நீண்ட நாட்களுக்கு பின்பு வடகரை கால்வாயில் கழிவுநீருக்கு பதிலாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது விவசாயிகள் மற்றும் திருமங்கலம் பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. திருமங்கலத்தில் நேற்று 24.6 மி.மீட்டர் மழை பெய்தது.

Tags : Thirumangalam ,Vadakara Canal ,
× RELATED ஊதுபத்தியால் வந்தது வினை வீட்டில் தீப்பற்றி பணம் பொருட்கள் எரிந்து நாசம்