×

நீர்பிடிப்பில் ‘செம மழை’ மருதாநதி அணை மடமடவென உயர்வு

பட்டிவீரன்பட்டி, அக். 31: நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக அய்யம்பாளையம் மருதாநதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 72 அடி கொள்ளளவில் 70 அடியை தொட்டு விட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் உள்ளது மருதாநதி அணை. 72 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி மலைப்பகுதிகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரே நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருதாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மடமடவென உயர்ந்து முழுகொள்ளளவை எட்டி வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணை இன்னும் ஒரு சில நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘மருதாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய மழையால் வறண்டு கிடந்த வறட்டலாறு, குண்டாறு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது அணைக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது. அணையின் மொத்த உயரம் 72 அடியில் தற்போது நிலவரப்படி 70 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணையில் தற்போது 165 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட அய்யம்பாளையம், சித்தரேவு, பட்டிவீரன்பட்டி, எம்.வாடிப்பட்டி மற்றும் மருதாநதி கரையோர மக்களுக்கு விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 60 கன அடி தண்ணீரை மட்டும் இன்று (அக்.31) திறந்து விடவுள்ளோம்’ என்றனர். அணை நிலவரத்தை செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், அணை பொறியாளர் மோகன்தாஸ் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Tags : Maradanady Dam ,watershed ,
× RELATED கோவையில் நடைபெறும் திறன் மேம்பாட்டு...