×

வத்தலக்குண்டுவில் பயன்பாடின்றி இருந்த ஆழ்துளை கிணறு உடனே மூடல்

வத்தலக்குண்டு, அக். 31: வத்தலக்குண்டுவில் பயன்பாடின்றி இருந்த ஆழ்துளை கிணற்றை அதிகாரிகள் உடனே மூடிய செயலை பொதுமக்கள் பாராட்டினர். வத்தலக்குண்டு பெத்தானியாபுரம் அருகே பட்டிவீரன்பட்டி செல்லும் குறுக்கு சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே சீமை கருவேலமர புதருக்கடியில் ஒரு ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், இளைஞர்கள் கார்மேல்ராஜ், சேகர், மாணிக்கம், தயாளன், சின்னதுரை, தமிழ்மாறன் ஆகியோர் இதுகுறித்து வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சற்று நேரத்தில் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா உடடியாக ஆழ்துளை கிணற்றை மூட ஏற்பாடு செய்தனர். இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். விசாரித்ததில் பல ஆண்டுகளுக்கு முன்பு கணவாய்பட்டி ஊராட்சியினர் குடிநீருக்காக போட்ட ஆழ்துளை கிணறு என்பது தெரிந்தது.

இதுகுறித்து பாக்யராஜ் கூறுகையில், ‘திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் எனது மனதை உறுத்திகொண்டே இருந்தது. சில நாளாக இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் இருந்தேன். நம் பகுதியில் அதுபோன்ற சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை தேடினேன். பெத்தானியபுரம் அருகே பார்த்தவுடன் பதறிப்போய் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன்’ என்றார்.

Tags : closure ,well ,Wattalakundu ,
× RELATED வத்தலக்குண்டுவில் சாலையின்...