×

பழநியில் அம்சமாக பெய்கிறது ஐப்பசி அடைமழை

பழநி, அக். 31: பழநியில் இடைவிடாது பெய்துவரும் ஐப்பசி அடைமழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பழநி நகர், சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஆதாரமாக பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு ஆகிய அணைகள் உள்ளன. இந்த அணைகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மழை பெய்தால் நீர்வரத்து கிடைக்கும். கடந்த சில தினங்களாக பழநி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஐப்பசி அடைமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 65 அடி உயரமுள்ள பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 49.31 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 304 கனஅடி நீர் வருகிறது. 7 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 39 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 66.47 அடியாக உள்ள வரதமாநதி அணையின் நீர்மட்டம் 63.32 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 60 கனஅடி நீர் வருகிறது. 50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 20 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 53 கனஅடி நீர் வருகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 47 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதன்மூலம் அணைகளில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Ipazi ,
× RELATED ஐப்பசி மாத விசேஷங்கள்