×

நவம்பர் 2ம் தேதி நடக்கவிருந்த நடுக்கடலில் விசைப்படகுகளை முற்றுகையிடும் போராட்டம் வாபஸ் நாட்டுப்படகு மீனவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சேதுபாவாசத்திரம், அக். 31: நாட்டுப்படகு மீனவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சேதுபாவாசத்திரத்தில் நவம்பர் 2ம் தேதி விசைப்படகுகளை நடுக்கடலில் முற்றுகையிடும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள 34 மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க கூட்டம் நடந்தது. அதன்படி வரும் 2ம் தேதி தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள் மீது முறையான நடவடிக்கை மேற்கொள்ளாத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டிப்பது.தடையை மீறி தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யும் சேதுபாவசத்திரம் விசைப்படகுகளையும், இரட்டைமடி வலைகளையும் நடுகடலிலேயே 500 நாட்டுப்படகுகள் மூலம் பறிமுதல் செய்தும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவது.

கடல் வளத்தையும், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்வளத்தையும் கடல் உயிரினத்தின் ஆதாரமான மீன்குஞ்சுகள் மீன் முட்டைகளையும் தொடர்ந்து அழித்து வரும் சேதுபாவாசத்திரம் அனைத்து விசைப்படகுகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பலமுறை மீன்வளத்துறையில் புகார் அளித்தும் கண்டும் காணாமல் நடந்து கொள்ளும் மீன்வளத்துறை உதவி இயக்குனர், மீன்வளத்துறை இணை இயக்குனர் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் அனைவரையும் துறை நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் இருந்து செல்லும் விசைப்படகுகளை நடுக்கடலில் 500 நாட்டுப்படகுகள் சூழ்ந்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என நாட்டுப்படகு மீனவர் நலச்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தலைமையில் சமாதான பேச்சுவார்தை நடந்தது. கூட்டத்தில் நாட்டுப்படகு நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ரவி, அதிராம்பட்டினம் பன்னீர், வீரப்பன், ஏரிப்புறக்கரை ரவி மற்றும் பத்மநாதன், சண்முகம், சந்திரசேகர், அந்தோணிபிச்சை உள்பட 34 மீனவ கிராம தலைவர்கள் பங்கேற்றனர்.விசைப்படகு சங்கம் சார்பில் மாநில மீனவர் பேரவை பொது செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜூதீன், மாவட்ட தலைவர் சேதுபாவாசத்திரம் ராஜமாணிக்கம், செல்வக்கிளி உள்ளிட்ட பல மீனவர்கள் பங்கேற்றனர்.இந்த பேச்சுவார்த்தையில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி, சலங்கை வலை போன்ற வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Tags : fishermen ,home ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...