×

ஓமலூர் ஒன்றியத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாறும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள்

ஓமலூர், அக்.31: ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 33 கிராம ஊராட்சிகளில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. அதில் இருந்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றியும், ஆழ்துளை கிணறுகளின் அருகில் சிறிய பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்தும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு, அனைத்து நீர்நிலைகளும் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன.

இதனிடையே, தமிழக அரசின் உத்தரவை அடுத்து, ஓமலூர் வட்டாரத்தில் நீர்நிலைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டன. மேலும், ஓமலூர் ஒன்றிய அதிகாரிகள், பழைய பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மணப்பாறையில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, பயன்பாடற்ற திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெள்ளக்கல்பட்டிகிராமத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர். மற்ற ஊராட்சிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags : rainwater harvesting structures ,Omalur Union ,
× RELATED ஓமலூர் ஒன்றிய குழுவின் முதல் ஆலோசனை கூட்டம்