×

4 ஆண்டுகளுக்கு பிறகு சங்ககிரி கிளைச்சிறை திறப்பு

சேலம், அக். 31: சேலம் சங்ககிரியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கிளைச்சிறை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் கைதிகள் இச்சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரியில் மத்திய சிறை உள்பட 14 கிளைச்சிறைகள் உள்ளது. இச்சிறைகளில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சங்ககிரி கிளைச்சிறை பாஸ்டல் பள்ளி சிறையாக செயல்பட்டு வந்தது. 18, 19வயதிற்குட் பட்ட சிறுவர்கள் இச்சிறையில் அடைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையின் போது, சிறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 50 அடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த சிறையில் இருந்த கைதிகள், சேலம் மற்றும் திருச்செங்கோடு சிறைக்கு மாற்றப்பட்டனர். இங்கு பணியாற்றிய வார்டர்கள் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

4 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த சிறையின் சுற்றுச்சுவர் சமீபத்தில் பணி முடிந்து திறப்பு விழாவுக்காக காத்திருந்தது. இதுகுறித்து சென்னை சிறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அனுமதி கிடைத்த நிலையில், நேற்று சங்ககிரி சிறையின் திறப்பு விழா நடந்தது. சங்ககிரி சார்பு நீதிபதி மேகலா மைதிலி, சிறையை திறந்து வைத்தார். நீதிபதி பாக்கியம், நீதித்துறை நடுவர்கள் சுந்தர்ராஜன், உமாமகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று முதல் சங்ககிரி பகுதியில் கைது செய்யப்படும் கைதிகள் இச்சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Sankagiri ,branch ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...