×

சாதக, பாதகங்களை அரசு ஆய்வு செய்யவேண்டும் விவசாயத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்த சாகுபடி சட்டம்

சேலம், அக். 31: தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் விவசாயத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அபாயம் கொண்டது. எனவே இந்த சட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு, செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு,  தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப்   பண்ணையம்  மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்)  சட்டம், 2019 என்ற  சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஒப்புதல் அளித்துள்ளார். ‘‘தமிழக  விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முக்கிய கொள்கை  முடிவுகளை வகுத்துள்ளதோடு, புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி,  செயல்படுத்தி வருகிறது. ஒப்பந்த சாகுபடி முறை, பல ஆண்டுகளாக நடைமுறையில்  இருந்தபோதிலும், ஒப்பந்த சாகுபடியில் பங்கு பெறும் விவசாயிகளின் நலனை  பாதுகாப்பதற்கான சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை. அதற்கான சட்டம் இயற்ற  2018-2019ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானது.

கடந்த  14.2.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த  சட்டத்திற்கு தற்போது குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு,  சட்டம் அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது,’’ என்று அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர்  அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்  விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்களது விளைபொருட்கள்  அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை,  ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்கு  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க  உதவும்,’’ என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சட்டம் விவசாயத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அபாயம் கொண்டது என்று விவசாய சங்கங்கள் கடும் அதிருப்தி ெதரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாய சங்கங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி கூறியதாவது: ஒரு விவசாயி, தனது நிலத்தில் பயிரை விதைக்கும் போதே, ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அறுவடை செய்து, அந்த நிறுவனத்திற்கே வழங்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் முக்கிய அம்சம். ஒப்பந்த நாளில் உள்ள சந்தை நிலவரத்தின் படி, என்னவிலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அந்த விலையே அறுவடையின் போது வழங்கப்படும். இப்படி வாங்கும் நிறுவனங்கள் தனித்துவம் பெற்றவையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மட்டுமே விவசாயிகள் ஒப்பந்தம் செய்து ெகாள்ள முடியும். இதே போல் விளைபொருட்களை அவர்களுக்கு கொடுத்த 14நாட்களுக்கு பிறகே அதற்குரிய விலை கிடைக்கும் என்பதும் அபத்தமானது. ஏற்கனவே தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை வழங்கி விட்டு விவசாயிகள் கடன்பாக்கியால் தத்தளித்து நிற்கின்றனர். இதில் இதர விளைபொருட்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு சாகுபடி செய்தால், விபரீதங்களே அதிகமாகும். எனவே இந்த சட்டம் குறித்து விவசாயிகளிடம் முழுமையாக கருத்து ேகட்பு நடத்தி, சாதக, பாதகங்களை ஆய்வு செய்து நிறைவேற்ற அரசு, முன்வரவேண்டும். இவ்வாறு தெய்வசிகாமணி கூறினார்.

Tags : Government ,pros ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...