×

ஆழ்துளை கிணறு தோண்டும்போது போர்வெல் உரிமையாளர்கள் கோர்ட் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்

சேலம், அக்.31:சேலம் மாவட்டத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் ராமன் பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் பயன்பாடற்ற, தூர்ந்துபோன, கைவிடப்பட்ட மற்றும் தற்காலிகமாக பழுதடைந்துள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் உடனடியாக பாதுகாப்பான முறையில் மூட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர்வெல் உரிமையாளர்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, அரசின் உரிய அனுமதி பெற்ற பிறகு மட்டுமே, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் தனியார் தோட்டங்கள் மற்றும் நிலங்கள், அரசுக்கு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் இருந்தால், அதனை  சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது தெரிந்தால், கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன், காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதேபோல், அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள்  ஏதேனும் பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு பொறுப்பான அனைத்து அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்தில் இதுவரை 5,563 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பான முறைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அந்தந்த துறை அலுவலர்கள் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் தொடர்பான புகார்களை, 1077 என்ற கட்டணமில்லா எண்ணிற்கோ அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவின் வாட்ஸ்அப் எண் 98943-45542 என்ற எண்ணிற்கோ உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்தார்.கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் போர்வெல் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Borewell owners ,well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...