×

மகாராஷ்டிராவில் இருந்து சேலத்திற்கு 100 டன் பெரிய வெங்காயம் வரத்து

சேலம், அக்.31: மகாராஷ்டிராவில் பெரிய வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து சேலத்திற்கு தினசரி 100 டன் பெரிய வெங்காயம் வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தான் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து இந்தியா முழுவதும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெரியவெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வரத்து சரிந்தது. இதனையடுத்து, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 முதல் 60 வரை உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் பெரிய வெங்காயம் விளைச்சல் சற்று அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அங்கிருந்து சேலத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம், சில நாட்களாக 100 டன்னாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது பெரிய வெங்காயத்தில் சிறிய அளவு வெங்காயம் கிலோ (மொத்த விலையில்)  20 முதல் 25 எனவும், பெரிய அளவுள்ள வெங்காயம் 35 முதல் 40 என விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர். பதுக்கல் காரணமா?:பெரிய வெங்காயம் விளைச்சல் சரிந்த காரணத்தால், வட மாநிலங்களில் குடோன்களில் மொத்த வியாபாரிகள் பதுக்கி வைத்து இருக்கிறார்களா?  என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, வட மாநிலங்களில் உள்ள குடோன்களை ஆய்வு செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆய்வு செய்தால் குறைந்தபட்சம் 20 முதல் 30 சதவீதம் பெரிய வெங்காயம் வெளியே வர வாய்ப்புள்ளது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை சரிய வாய்ப்புள்ளது என  வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Salem ,Maharashtra ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...