×

போனஸ் பிரச்னையால் பணிக்கு செல்ல தொழிலாளர்களுக்கு விருப்பமில்லை

பள்ளிபாளையம், அக்.31: போனஸ் பிரச்னையில் உடன்பாடு ஏற்படாதால், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்தும், வேலைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லையென தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 9.5 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். ஆனால், 9 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால், பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது. கடந்த ஆண்டை விட போனஸ் குறைக்கப்பட்டதை கண்டித்து, தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று சேலம் தொழிலாளர் நல அலுவலகத்தில், தொழிலாளர் நல அலுவலர் சங்கீதா முன்னிலையில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெறுமென இருதரப்பினருக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், துணைச் செயலாளர் முத்துகுமார் ஆகியோர் பங்கேற்று, கடந்த ஆண்டை விட, போனஸ் தொகை குறைத்ததால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் பண்டிகை முடிந்த பின்னரும், விசைத்தறி கூடங்களுக்கு செல்ல அவர்கள் விரும்பவில்லை. இப்பிரச்னையில் தீர்வு ஏற்பட்ட பிறகே, தொழிலாளர்கள் பணிக்கு செல்வார்கள் என தெரிவித்தனர். இதையடுத்து, வரும் திங்கட்கிழமை 4ம் தேதி மாலை 3.30 மணிக்கு, இருதரப்பினரும் நேரில் ஆஜராகும்படி தொழிலாளர் நலத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், வரும் 2ம் தேதி மாலை, காவேரி ரயில் நிலையம் அருகே சிஐடியூ தொழிற்சங்க அலுவலகத்தில், ஆலோசனை கூட்டத்தை தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் மாநில விசைத்தறி தொழிலாளர் சங்க துணைத்தலைவர் சுப்பிரமணி பங்கேற்று பேசுகிறார். இதில் வேலை நிறுத்தம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென தெரிகிறது.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா