×

ஆழ்துளை கிணறுகளின் கேசிங் பைப் மூடிகள் தட்டுப்பாடு

திருப்பூர், அக். 31: திருப்பூர் மாவட்டம் முழுவதும் உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளின் கேசிங் பைப் மூடிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் பைப் உற்பத்தியாளர்கள் மூடி தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மாநகர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள் என 2 லட்சத்து 67 ஆயிரம் வரிவிதிப்பு கட்டடங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் உள்ளன.

காங்கயம், தாராபுரம், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, அவிநாசி ஆகிய பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. விவசாயிகள் தண்ணீரின் தேவையை பொறுத்து ஆழ்துளை கிணறுகள் அமைத்துக்கொள்கின்றனர். ஆழ்துளை கிணறுகள் குறைந்த பட்சம் 4.5 இன்ஞ் முதல் அதிகபட்சம் 8.5 இன்ஞ் வரை அகலம் கொண்டதாக உள்ளது. 10.5 இன்ஞ் முதல் 40 இன்ஞ் வரை ரிக் இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணறு துளையிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் லட்சக்கணக்கான ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளது. புதிதாக போடும் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் தேவையை பொறுத்து ஆழமாக துளையிடுகின்றனர். மேலும் தண்ணீர் வற்றிய ஆழ்துளை கிணறுகளை ஒரு சிலர் கேசிங் பைப்பின் மீது பிளாஸ்டிக் மூடியை பொருத்துகின்றனர். ஒரு சிலர் பிளாஸ்டிக் மூடி போடாமல் சாக்கு பைகளை மூடி கயிற்றில் கட்டுகின்றனர். ஒரு சிலர் கேசிங் பைப்புகளை நிலம் மட்டத்திற்கு அறுத்து விடுகின்றனர். சிலர் கண்டுகொள்வதில்லை.

நிலத்தின் உரிமையாளர்கள் கவனக்குறைவால் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறப்பது தொடர் கதையாக உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்தான். இதைதொடர்ந்து தமிழக அரசு உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிக்கும் வகையில் அமைக்க வேண்டும். கேசிங் பைப் நிலத்தில் பதித்து எளிதில் திறக்க முடியாத வகையில் மூடி போட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து ஆழ்துளை கிணற்றின் உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான மூடிகளை ஹார்டுவேர் கடைகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர். மூடிகள் அதிக விற்பனை இல்லாததால் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பு வைத்திருந்தனர். சுஜித் இறப்புக்கு பின் தமிழகத்தில் உள்ள அனைத்து ஹார்டுவேர் கடைகளில் இருப்பு வைத்துள்ள மூடிகள் அனைத்தும் விற்றுள்ளது.

இதை தொடர்ந்து பிளாஸ்டிக் பைப் உற்பத்தியாளர்களிடம் 4.5 இன்ஞ் முதல் 8.5 இன்ஞ் அகலம் உள்ள மூடிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். ஒரு சில ஹேர்டுவேர் கடை உரிமையாளர்கள் மூடிகளை இலவசமாக கொடுத்து வருகின்றனர். மூடிகள் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பிளாஸ்டிக் பைப் உற்பத்தியாளர்கள் மூடி உற்பத்தி செய்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மூடி அனுப்பும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து ஹார்டுவேர் கடை உரிமையாளர் மாரிசாமி கூறியதாவது: ஆழ்துளை கிணற்றின் கேசிங் பைப் மூடி குறைவான எண்ணிக்கையில் தான் விற்பனையாகிறது. எங்கள் கடைகளில் அதிகமாக இருப்பு வைப்பது இல்லை. திருச்சி மணப்பாறை குழந்தை இறப்புக்கு பின் தமிழக அரசின் கடுமையான உத்தரவை தொடர்ந்து கேசிங் பைப் மூடி கேட்டு தினமும் 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதையடுத்து அனைத்து அளவுகளிலும் மூடிகள் வாங்கி இருப்பு வைக்க உள்ளோம். ஒரு மாதத்திற்கு மூடிகளின் கொள்முதல் விலைக்கே பொதுமக்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளோம், என கூறினார்.

Tags : wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்