×

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக நாடகமாடுகிறார்கள்

தாராபுரம், அக். 31: எடப்பாடி அரசு தமிழ்நாடில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக  நாடகமாடுகிறார்கள். அவர்கள் தற்போது உள்ள வருவாயை இழக்க தயாராக  இல்லை என ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத்தலைவர் அதியமான் கூறினார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆதிதமிழர் பேரவையின் தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன் வீட்டு நிகழ்ச்சியில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கலந்து கொண்டார். இதையடுத்து ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தையே வேதனை அடைய வைத்த சுஜித்தின் மரணத்தின் மூலம் தமிழக அரசின் இந்த ஆட்சியில் ஆழ்துளை கிணற்றில் யாராவது விழுந்துவிட்டால் அவரை மீட்க அரசிடம் முறையான இயந்திரங்கள் எதுவும் இல்லை என்பதையே சிறுவன் சுஜித்தின் மரணம் காட்டுகிறது.

மேலும் துப்புரவு, தூய்மைப் பணியாளர்கள் மனித கழிவுகள், சாக்கடை கழிவுகள் அகற்றும்போது மாதம்தோறும் 3க்கும் மேற்பட்டோர் விஷவாயு தாக்கி இறந்து வருகின்றனர். இந்த இழப்புகளுக்கு காரணம்  முறையான உயிர்காக்கும் உபகரணங்கள் எதுவும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படுவதில்லை. இதற்கு சட்டம் இருந்தும் தமிழக அரசு செயல்படுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஆழ்துளை கிணறுகளை மூடாமல் திறந்த வெளியில் வைத்துள்ளனர். தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியம் பயனற்ற ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகளை மூடாமல் வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ஏற்க இருக்கிறீர்கள்? எனவே திறந்த வெளியில் கேட்பாரற்று கிடக்கும் அரசுக்குச் சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும். தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் கிடையாது. அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது போல் நாடகமாடுகிறார்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை கண்டிப்பாக நடத்த மாட்டார்கள். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன் தொகையை பெற்றுக்கொண்டு வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வருவாய் இழந்து விடக்கூடாது என்பதற்காக உள்ளாட்சி தேர்தலை நடத்த போவதில்லை.

பிரதமர் மோடி சிறுவன் சுஜித்தின் மரணத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தபோது, சுஜித் வில்சன் என்று ஒரு மதத்தின் பெயரால் ஒரு ஜாதியின் பெயரால் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்தே மத்திய பா.ஜ. அரசின் பிரிவினைவாதம் தெரிகிறது, என்றார்.ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலைய செயலாளர் வீரவேந்தன், கோவை ரவிக்குமார், பொதுச்செயலாளர் விடுதலை செல்வன், பெரியார் தாசன், பொன் செல்வம், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் நாகேந்திரன்  உள்ளிட்ட ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...