×

புலிகரை ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

தர்மபுரி, அக்.31: பஞ்சப்பள்ளியில் இருந்து புலிகரை ஏரி வரை கால்வாய் அமைத்து, நீர் கொண்டு வரும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், புலிகரையில் உள்ள புலிகரை ஏரி 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியில் 15 ஆண்டுகளாக மழைநீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. மழைக்காலங்களில் பஞ்சப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, புலிகரை ஏரிக்கு கால்வாய் மூலம் இணைக்கும் திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மேக்லாம்பட்டி ஏரி, காட்டேரி, மோதுகுலஅள்ளி ஏரி, பத்தலஅள்ளி ஏரி, ஜிப்பளகொட்டாய்ஏரி, அழகம்பட்டி ஏரி, காட்டம்பட்டி ஏரி, பேகாரஅள்ளி ஏரி, முருக்கம்பட்டி ஏரி, தம்மநாயக்கம்பட்டி ஏரி என 14 ஏரிகள் இணைக்கப்பட்டு, இறுதியாக புலிகரை ஏரிக்கு தண்ணீர் வந்தடைகிறது.

கடந்த 17 ஆண்டுகளாக ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், இந்த பகுதி முழுவதும் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விவசாயம், கிணற்று பாசனத்தையும், மழையையும் நம்பியே உள்ளன. பருவமழை தொடர்ந்து பெய்யாததால் கிணறுகளிலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மற்ற மாதங்களில் கிணறு தண்ணீரின்றி வறண்டுவிடும். எனவே, ஏற்கனவே அறிவித்த திட்டமான பஞ்சப்பள்ளியில் இருந்து புலிகரைக்கு நீர் கொண்டு வரும் திட்டத்திற்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,Tiger ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு