×

6வது நாளாக மருத்துவர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி, அக்.31: கிருஷ்ணகிரி  அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வெளி  நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி  அரசு தலைமை மருத்துவமனையில், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார  கிராமங்களில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள்  சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 84 அரசு  மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 25ம் தேதி  முதல் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில்  காலவரையற்ற போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி  அரசு மருத்துவமனையில் 75க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள்ீந்த  போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற  முடியாமல் அவதியுற்று வருகின்றனர். ஆண், பெண் நோயாளிகளுக்கு ஒரே பிரிவில்  சிகிச்சையளிக்கப்படுவதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு நோயாளிகள்  அவதியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 6வது நாளாக  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நேற்று,  தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள்  மருத்துவர்கள் ராமநாதன், சதீஷ், கோபி ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.  இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கிருஷ்ணகிரியில் இருந்து  அரசு மருத்துவர்கள் சிலர் சென்றுள்ளனர். எங்களது நியாயமான கோரிக்கையை  முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர். கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட மாவட்டம் முழுவதும் 250க்கும்  மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,  மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில்,  ஊதியம் மற்றும் பதவி உயர்வு கோரிக்கையை முன்நிறுத்தி 48 மணி நேரம் தொடர்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், உயிர்காக்கும் அவசர சிகிச்சை  மட்டும் அளிக்கப்படும் என்றும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை