×

பாப்பாரப்பட்டி அருகே டூவீலர் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தர்மபுரி, அக்.31: தர்மபுரி அருகே டூவீலர் ஏற்றி தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, எஸ்பியிடம் வக்கீல் புகார் மனு அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி ஓஜிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் கார்த்திகேயன்(45). இவர் மாவட்ட எஸ்பி ராஜனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 16ம் தேதி, தர்மபுரி செல்வதற்காக என் நண்பர் மற்றும் டிரைவர் பூபதியை காரை எடுத்து வரச் சொன்னேன். அவர் என் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பாக 4 டூவீலர்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டு, அவற்றை அங்கிருந்து எடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு வாகனத்தை நிறுத்தியவர்கள், அவரை தரக்குறைவாக திட்டியுள்ளனர். நான் வீட்டிற்கு வெளியே வந்தவுடன், அதை கண்டுகொள்ளாமல் இருவரும் தர்மபுரி சென்றுவிட்டு இரவு 8.45 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தோம். அப்போது, பாபு (எ) சரவணன் என்பவர், எனது டிரைவரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டினார். நான் தடுக்க முயன்ற போது, பாபுவும் அவரது உறவினர்களான விநாயகம், சர்வேஸ்வரன் மற்றும் ஹரிகரன் ஆகியோர் சேர்ந்து டிரைவரை சரமாரியாக தாக்கினர்.

அப்போது, என் மீது சர்வேஸ்வரன் என்பவர், தனது டூவீலரை விட்டு ஏற்றினார். மேலும், செருப்பால் என்னை தாக்க முயன்றார். இதன் சிசிடிவி பதிவுகளை, ஆதாரத்துடன் பாப்பாரப்பட்டி போலீஸ் எஸ்ஐ முனிராஜிடம் கொடுத்து முறையாக புகார் அளித்தேன். ஆனால், புகாரின் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்ட என் டிரைவர் பூபதி, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் வாக்குமூலம் பெற்று, எதிரிகளுக்கு சாதகமாக எளிதில் பிணையில் வரக்கூடிய பிரிவுகளில் எஸ்ஐ முனிராஜ் வழக்கு பதிவு செய்துள்ளார். என் மீது டூவீலரை ஏற்றி, செருப்பால் அடிக்க முயன்று, அருவருக்கதக்க வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பாபு (எ) சரவணன், அவரது மனைவி சுபாஷினி ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே, உண்மை நிலையை ஆராய்ந்து எனக்கு நீதி கிடைக்க ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : paparapatti ,
× RELATED ஆன்லைனில் ரம்மி விளையாடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை