×

டாக்டர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஈரோடு, அக்.31: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முதல் தற்காலிகமாக ஒத்திவைத்தனர். மற்றொரு சங்கத்தினர் 6ம் நாளாக ஸ்டிரைக்கை தொடர்ந்ததால் நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். மத்திய அரசு டாக்டருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கடந்த 21ம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 24ம் தேதி முதல் ஒத்துழையாமை இயக்க
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இப்போராட்டத்தில் ஈரோட்டில், அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த 450 பேர் ஈடுபட்டனர். நேற்று (30ம் தேதி) மற்றும் இன்று (31ம் தேதி) 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையில், சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், அரசு டாக்டர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகளை பரிந்துரைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அதன்பேரில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தங்களது போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

இதனால், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கின. ஆனால், அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்துவரும் போராட்டம் தீவிரமடைந்து, நேற்று 6ம் நாளாக தொடர்ந்தது. இதனால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கத்தினர், தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினை ஒத்திவைத்தாலும், மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று காலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

இதில், அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கூடிய அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்க கூடாது. கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்பிலும், சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றவும், படிக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும். மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு நேரடி கலந்தாய்வு மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், ஈரோடு மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை