×

மழை நீரை சேமிக்க முடியவில்லை சாஸ்திரமுட்லு ஏரியை புனரமைக்க வேண்டும்

தர்மபுரி, அக்.31: பாலக்கோடு அருகே, சாஸ்திரமுட்லு உப்பம்பள்ளம் ஆற்றில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் சின்னாற்றில் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, சாஸ்திரமுட்லு, சங்கராபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், வாழை, தென்னை, நெல் உள்ளிட்டவை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை பொய்த்தது மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், விவசாய கூலித்தொழிலாளர்கள் பிழைப்புக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சாஸ்திரமுட்லு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மழை நீரை சேமிக்க ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரிக்கு பெட்டமுகிலாளம், நாமகிரிப்பேட்டை காப்பு காடுகளில் பெய்யும் மழைநீர் வருகிறது.
 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், சாஸ்திரமுட்லு ஏரியில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வீணாக சின்னாற்றில் கலக்கிறது. இந்த ஏரியில் இதுவரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், காப்புக்காடு பகுதியில் இருந்து ஆண்டு முழுவதும் பெய்யும் மழையில் சுமார் 2 டிஎம்சி தண்ணீர், வீணாக சின்னாற்றில் கலக்கிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கிடைக்கும் மழைநீரை சேமிக்க முடியாமல் வீணாகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளம் காப்புகாட்டில் பெய்யும் மழைநீர், சாஸ்திரமுட்லு ஏரியில் சேமிக்கப்படும். அந்த ஏரியின் தடுப்பு உடைந்ததால், மழைநீரை சேமிக்க முடியாமல், சின்னாற்றில் வீணாக கலந்து பயனின்றி போகிறது. எனவே, சாஸ்திரமுட்லு ஏரியை புனரமைப்பு செய்து மழைநீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2 டிஎம்சி மழைநீர் உப்பம்பள்ளம் ஆற்றிலிருந்து, வீணாக ஆற்றில் கலக்கும் நிலை உள்ளது. அதை தடுத்து நிறுத்தி விவசாயத்திற்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Sastramudlu Lake ,
× RELATED மழை நீரை சேமிக்க முடியவில்லை சாஸ்திரமுட்லு ஏரியை புனரமைக்க வேண்டும்