×

நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை தீவிரம் மஞ்சூர்-குன்னூர் சாலையில் பாறை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர்,அக்.31: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஊட்டி,  மஞ்சூர் போன்ற பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்தது. மஞ்சூர் பகுதியில் பெய்த கன  மழையால், பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த 22, 23ம் ஆகிய தேதிகளில் மிக  அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஊட்டி,  குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம்  உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  பெரும்பாலானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு  செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், எதிர்பார்த்த  அளவிற்கு மழை பெய்யவில்லை. கடந்த ஒரு வாரமாக வானம் மேக மூட்டத்துடன்  மட்டுமே காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் ஊட்டி,  குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் மீண்டும் மழை  துவங்கியுள்ளது. ஊட்டி, கேத்தி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் நேற்று  முன்தினம் விடிய விடிய மழை கொட்டியது.

இடைவிடாமல் பெய்த மழையால் நேற்று காலை மஞ்சூர்-குன்னூர் சாலையில் கரும்பாலம் அருகே ராட்சத பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன.  மஞ்சூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சம்பவ இடத்தின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது. தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கிண்ணக் கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி சாலைகளிலும் இரவு பெய்த மழையால் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டது. நெடுஞ்சாலைதுறையினர் உடனுக்குடன் மண் சரிவுகளை அகற்றினார்கள். கேத்தி  பாலாடா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர்  தேங்கியதால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஊட்டி  நகராட்சிக்குட்பட்ட ஓல்டு ஊட்டி பகுதியில் குடியிருப்பு மீது மரம் ஒன்று  விழுந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் மேற் கூரை  மட்டும் லேசாக சேதம் அடைந்தது. இதேபோல், மேரிஸ் ஹில் பகுதியில் காரின் மீது  மரம் ஒன்று விழுந்ததில், கார் சேதம் அடைந்தது. மேலும், ரோகினி பகுதியில்  பசுவைய்யா என்பவர் விட்டு தடுப்புச்சுவர் விழுந்து சேதமடைந்துள்ளது.மழையால் வாகன ஓட்டிகள் கடும்  சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே  வாகனங்களை இயக்கினர். இந்த மழை தொடர்ந்தால், பல்வேறு பகுதிகளிலும்  நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இதனால், மீண்டும் அனைத்து துறை  அதிகாரிகளையும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம்  அறிவுறுத்தியுள்ளது. மின்னல் தாக்கி முதியவர் காயம்: ஊட்டி காந்தல் கப்பினிகவுடர் லைன் பகுதியில் நேற்று பெய்த மழையின்போது ஒரு வீட்டை மின்னல் தாக்கியது. இதில், வீட்டிலிருந்த முதியவர் பசுவைய்யா(80) என்பவர் காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் முதியவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : district ,Nilgiris ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்