×

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அனைத்து துறைகளும் தயார்

ஊட்டி, அக்.31:நீலகிரி மாவட்டத்தில்  பெய்த வடகிழக்கு பருவமழையால் முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாக நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். குடிசை வீடுகளில் இருந்த பெரும்பாலானவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் அதிக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையால் குன்னூர்-ஊட்டி இடையே ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் அருகே மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர்பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்தனர்.

மேலும் கரும்பாலம் அருகே குந்தா சாலையில் பாறை விழுந்து போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து மழை பெய்தால் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மழை பாதிப்பை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பருவமழை பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். நேற்று குன்னூரில் குப்பைகள் மேலாண்மை பூங்கா திறப்பு விழாவினை துவங்கி வைக்க மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வந்தார். விழாவை துவக்கி வைத்த பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஆபத்தான நிலச்சரிவுகள் ஏற்படும் அபாய பகுதிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கன மழையால் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை சீரமைக்கும் பணியில் அனைத்து  துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

குன்னூர் சுற்று வட்டார பகுதியில் சில இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளது. அதிகாரிகள் மூலம் அந்த பகுதியில் ஆய்வுகள் செய்து தொடர்ந்து பாறைகள் விழும் அபாயம் இருந்தால் அந்தந்த பகுதி சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும்.இதுவரையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக செயல்பட வேண்டும், தொடர்ந்து மழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags : Northeast Monsoon ,
× RELATED வரும் 15ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை...