×

மாநகர பகுதிகளில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

ஈரோடு, அக்.31: ஈரோட்டில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் நேற்று மனு அளித்தனர். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாநகர் முழுவதும் பாதாள சாக்கடைக்காகவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காகவும், பாதாள மின்கேபிள் திட்டத்திற்காகவும் சாலைகளில் குழி தோண்டப்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் பணி முடிந்தும் குழி சரிவர மூடாததால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் போடப்பட்ட தார்ச்சாலைகள் சில நாட்களிலேயே குண்டும், குழியுமானதால் சாைல போட்ட ஒப்பந்ததாரர் மீதும், கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாணை அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே மாநகராட்சியில் சொத்து வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஊராட்சிக்கோட்டையில் இருந்து மாநகராட்சி பகுதிக்கு தூய்மையான குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை மாநகராட்சி நிர்வாகமே செயல்படுத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் தெருவிளக்கு பராமரிப்பு பணியை தனியார் இடம் ஒப்படைத்ததால் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. எனவே, தெருவிளக்கு பராமரிப்பு பணியை தனியாரிடம் இருந்து ரத்து செய்து விட்டு மாநகராட்சி எடுத்து செய்ய வேண்டும். மாநகராட்சி பகுதியில் குப்பைக்கு தனியாக வரி விதித்த பிறகும், தூய்மை இந்தியா திட்டம் அறிவித்த பிறகும் சாக்கைடையை சுத்தம் செய்யாமலும், தெருக்களில் உள்ள குப்பைகளை கூட்டாமலும், இருப்பதால் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி பகுதியில் நடைபெறும் அனைத்து ஒப்பந்த பணிகளும் தரத்தோடு செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வல்லுநர்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். இதில், மண்டல தலைவர்கள் ஜாபர்சாதிக், திருச்செல்வம், அம்புலி, முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், இளைஞர் காங்கிரஸ் சதீஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Roads ,area ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...