×

டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்க 1.30 லட்சம் வீடுகளில் ஆய்வு

ஈரோடு, அக்.31: ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளில் ஆங்காங்கே தேங்கும் நீரில் டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யும் கொசுப்புழுக்கள் உருவாகி வருகிறது. இதன்மூலம், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு பரவாமல் தடுக்க கலெக்டர் கதிரவன் தலைமையிலான சிறப்பு குழுவினர் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழுக்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, பூட்டி கிடக்கும் வீடுகள், வணிக வளாகங்கள், தியேட்டர்களில் குழுவினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் கொசுப்புழுக்களை உருவாக்கும் காரணிகள் இருந்தது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.நேற்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெருந்துறை ரோடு, காலிங்கராயன் விருந்தினர் இல்லம் பகுதி, ஆசிரியர் காலனி, அவ்வையார் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக கலெக்டர் கதிரவன் தலைமையில் ஆய்வு பணி நடந்தது.

இதில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி ஆணையர் விஜயா, சுகாதார அலுவலர் இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவ்வையர் வீதியில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு வீட்டின் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருந்தது.இதை பார்த்த கலெக்டர், வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். பல வீடுகளில் ஆய்வு செய்தபோது அங்கு டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்களை உற்பத்தி செய்யும் காரணிகள் இருந்தது தொடர்பாக 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளை பொருத்தவரை இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, 1,200 தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு டெங்கு கொசு தொடர்பான காரணிகள் இருந்தது தொடர்பாக இதுவரை 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழுவிற்கு 10 பேர் வீதம் 32 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இக் குழுவினர், மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் முதல் சுற்று ஆய்வு பணியை முடித்துள்ளனர். இந்த வீடுகளில் டெங்கு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்யும் வகையில் கிடந்த பழைய டயர், பிளாஸ்டிக் பொருட்கள், உரல், காலியான டப்பா ஆகியவை அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு குறைபாடு இருந்ததாக 13 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : households ,dengue mosquitoes ,
× RELATED ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி...