×

பள்ளிகள் அருகில் வேகத்தடைகள் இல்லாததால் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படும் மாணவர்கள்

மதுராந்தகம், அக். 31: மதுராந்தகம் நகரில் பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் வேகத்தடைகள் இல்லாததால், சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மதுராந்தகம் பஜார் வீதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்து கார்னேஷன் நடுநிலைப் பள்ளி செயல்படுகின்றன. இங்கு 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதேபோன்று பார்த்தசாரதி தெருவில் செயல்படும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2800 மாணவிகளுக்கு மேல் படிக்கின்றனர்.இதில், பெரும்பாலானோர் மதுராந்தகம் நகரை தாண்டி உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள். காலையில் மதுராந்தகம் நகருக்கு வரும் பஸ்களை பிடித்து பள்ளிக்கு வந்து, மீண்டும் பஸ் மூலம் தங்களது கிராமங்களுக்கு செல்கின்றனர். இவர்கள், காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளிக்கு வரும் போதும், வீடு திரும்பும்போது சாலையை மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டியுள்ளது.

சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டும் வாலிபர்களால், பெரும் தொந்தரவு ஏற்படுகிறது என பெற்றோர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையை சற்று மாற்றி அமைக்க அவர்களின் வேகத்தை குறைக்க குறிப்பிட்ட பள்ளிகள் இயங்கும் அந்த 2 தெருக்களிலும் சில மீட்டர் இடைவெளியில் வேகத்தடைகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.மேலும், பள்ளிகள் செயல்படும் பகுதியில் வாகன ஓட்டிகள் குறைவான வேகத்தில் செல்வதற்கான அறிவிப்பு பலகைகளை சாலையோரங்களில் வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்த புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. இதற்கு முன் ஒருசில இடங்களில் இதுபோன்ற புகார்களின் அடிப்படையில் வேகத்தடைகள் சில சாலைகளில் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் எங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.குறிப்பாக ஒரு ஓமியோபதி மருத்துவர் காலையில் பணிக்கு செல்லும்போது இந்த சாலை சரியாக இருந்தது. அவர், மீண்டும் இரவு வீடு திரும்பும்போது, அந்த இடத்தில் வேகத்தடை அமைத்தது அவருக்கு தெரியாமல் போனது. இதனால், திடீரென வேகத்தடையில் கார் ஏறி இறங்கியதால், விபத்துக்குள்ளாகி குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களால், வேகத்தடை அமைக்க முடிவதில்லை என்றார்.

Tags : road ,schools ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...