×

ஆவடி காந்தி நகரில் மழைநீர் தேக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் படுத்து முன்னாள் கவுன்சிலர் போராட்டம்

ஆவடி, அக். 31: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் கால்வாய் அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் உள்ள தெருக்களில் முறையான வடிகால் வசதி இல்லாமல் மழைநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, ஆவடி, காந்திநகர், இம்மானுவேல் தெருவில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. சில வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நேற்று காலை தகவல் கொடுத்துள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் பார்வையிட்டு எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள். இதனை அடுத்து அப்போது முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் சிலர் ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அலுவலக நுழைவாயிலில் பாய், தலையணைகளை போட்டு படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மாநகராட்சி உதவி பொறியாளர் சத்தியசீலன் தலைமையில் ஊழியர்கள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் காந்திநகர் பகுதியில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர். இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தெருவில் தேங்கிய தண்ணீரை அகற்ற  நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். உடனே முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்டோர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags : councilor ,corporation office ,city ,Avadi Gandhi ,
× RELATED பாஜ கவுன்சிலர் கைது